ஈரோடு, மார்ச் 5: ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாம் ஈரோட்டில் நடந்தது. மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பயிற்சி கையேட்டினை வழங்கி பேசினார். ‘‘கூட்டுறவுத்துறையின் அமைப்பு மற்றும் படிநிலைகள்’’ குறித்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபனும், ‘‘கூட்டுறவு சங்க திட்டங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள்’’ குறித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் அழகிரியும், ‘‘கூட்டுறவு சங்க நிர்வாகம் மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்’’ என்ற தலைப்பில் ஈரோடு சரக துணைப்பதிவாளர் மணியும், ‘‘கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகள், பொது விநியோக திட்டம்’’ குறித்து கோபி சரக துணைப்பதிவாளர் கந்தராஜாவும் பயிற்சி அளித்தனர்.மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கலைமணி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.