×

அதிமுகவினர் புறக்கணித்ததால் ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் 3வது முறையாக ஒத்திவைப்பு

ஈரோடு, மார்ச் 5: அதிமுகவினர்  புறக்கணித்ததால் ஈரோடு ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான  மறைமுக தேர்தல் மூன்றாவது முறையாக நேற்று ஒத்திவைக்கப்பட்டது.ஈரோடு  மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றியக்குழு தலைவர்,  துணைத்தலைவர், பஞ்சாயத்து துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் கடந்த ஜனவரி  மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இதில், 12 ஊராட்சி ஒன்றியங்களிலும்,  பஞ்சாயத்து துணைத்தலைவர்கள் பதவிக்கும் தேர்தல் சுமூகமாக நடத்தப்பட்டு,  வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால், ஈரோடு, டிஎன்.பாளையம்  மற்றும் சென்னிமலை ஊராட்சியில் கொடுமணல், புஞ்சை பாலத்தொழுவு ஆகிய  பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தல் பல்வேறு  காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு, டிஎன்.பாளையம் ஊராட்சி  ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கும், சென்னிமலை ஊராட்சியில்  கொடுமணல், புஞ்சை பாலத்தொழுவு பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளுக்கு மட்டும்  2வது முறையாக கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்தலில்  பஞ்சாயத்து துணைத்தலைவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். ஈரோடு ஊராட்சி  ஓன்றியத்தில் மொத்தமுள்ள 6 கவுன்சிலர் பதவியில் திமுக 3ம், அதிமுக 3ம்  கைப்பற்றின. இதனால், தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்வில்  யாராவது ஒருவர் மற்றொருவருக்கு ஆதரவு வழங்கினால் மட்டுமே, வெற்றி பெற  முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த தேர்தலில் திமுக  கவுன்சிலர்கள் பிரகாஷ், திருமூர்த்தி, சவுந்தரவள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.  ஆனால், அதிமுகவினர் பங்கேற்காததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல்,  டிஎன்.பாளையத்தில் நடந்த தேர்தலில் திமுகவினர்  புறக்கணித்ததால் அங்கும்  தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு, டிஎன்பாளையம் ஊராட்சி  ஒன்றிய தலைவர், துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நேற்று மூன்றாவது  முறையாக அறிவிக்கப்பட்டு காலை 10.30 மணிக்கு துவங்கியது. வழக்கம்போல்,  திமுக சார்பில் வெற்றி பெற்ற 3 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.  அதிமுகவினர் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து, காலை 11.05 மணிக்கு  தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் அழகிரி, சிவசங்கரன்  ஆகியோர் அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டினர். இதேபோல், மதியம் 3.30  மணிக்கு நடந்த துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலும்  ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்காக நடத்தப்பட்ட  மறைமுக தேர்தல் மூன்றாவது முறையாக நேற்றும் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து  தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்,`மாநில தேர்தல் ஆணையம், 4வது முறையாக  தேர்தலை அறிவிக்கும். அன்று எந்த கவுன்சிலர் பங்கேற்றாலும், அவர்களிடம் மனு  பெற்று, தலைவர், துணைத்தலைவர் தேர்தல் குலுக்கல் முறையில் தேர்வு  செய்யப்படுவர்’ என்றனர்.டி.என்.பாளையம் ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த விஜயலட்சுமி 6 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Tags : vice president ,election ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!