×

பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய 10 ரோபோக்கள் விரைவில் வாங்கத்திட்டம்

கோவை, மார்ச்.5: கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 3,500க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. மாநகரில் மட்டும் 600 கி.மீ. தூரத்துக்கு மேல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுகின்றன. அடைப்புகளை சரிசெய்ய தேவையான கட்டமைப்புகளுடன் கூடிய லாரிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. இந்த லாரிகளை பயன்படுத்தி, பாதாள சாக்கடையில் ஆள் இறங்க அமைக்கப்பட்ட ‘மேன் ஹோல்’ வழியாக அதிக அழுத்தம் கொடுத்து அடைப்புகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், மனித கழிவுகளை அகற்றவும் தனியார் நிறுவனத்தினரால் ‘ரோபோ’ கொள்முதல் செய்யப்பட்டு கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன. உப்பிலிபாளையம் சிக்னல் அருகே பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய இந்த ரோபோ இயந்திரம் முதன் முதலாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயன்படுத்தப்பட்டது. இந்த ரோபோ இயந்திரத்தை பயன்படுத்தி 30 அடி ஆழத்துக்கு கீழே உள்ள அடைப்புகளை கூட சரி செய்ய முடியும். பயிற்சிபெற்ற ஒருவர் இந்த ரோபோவை இயக்குவார். பாதாள சாக்கடையின் மேன்ஹோல் அருகே ரோபோ இயந்திரத்தை நிறுத்தி, அதனுடன் கை போல் இணைக்கப்பட்ட ஒயர் பகுதிகள் குழிக்குள் இறங்கப்படும். அந்த இயந்திரத்தின் மேல் பகுதியில் உள்ள திரை மூலம், குழிக்குள் அடைப்பு ஏற்பட்ட இடத்தை காணலாம். அதற்கேற்ப இயந்திரத்தை பயன்படுத்தி அடைப்புகளை சிறிது நேரத்தில் சரி செய்து விடலாம்.இதனிடையே மேலும் 10 ரோபோ இயந்திரங்கள் வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரோபோ இயந்திரத்தின் செயல்பாடு மிகவும் திருத்திகரமாக உள்ளது. மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மேலும் 10 ரோபோக்கள் வாங்க திட்டமிட்டுள்ளோம். அது விரைவில் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்’’ என்றார்.` இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிக்கு ரோபோக்கள் விரைவில் வாங்கப்பட்டால் அது மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான். இருப்பினும் தற்போது துப்புரவு தொழிலாளர்களில் பலர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சாக்கடைகளை சுத்தம் செய்து வருகின்றனர். சிலர் மட்டுமே கை கவசம், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். ரோபோ வாங்கப்படும் வரை துப்புரவு தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தான் சாக்கடையை சுத்தம் செய்கிறார்களா? என மாநகராட்சி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்’’ என்றனர். இது குறித்து துப்புரவு தொழிலாளர் ஒருவர் கூறுகையில், ‘‘ரோபோக்கள் பயன்படுத்தப்படும் பட்சத்தில் அதனை இயக்க எங்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். ரோபோக்களை இயக்க வெளியில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுக்கக்கூடாது. அதே சமயம் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் எங்களுக்கு பணியின்போது வழங்கவேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED வேளாண் பல்கலையில் கோடை கால பயிற்சி முகாம்