×

கோவையில் சர்வதேச பொறியியல் கண்காட்சி துவங்கியது நாட்டில் 2 வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது

கோவை, மார்ச். 5: கோவையில் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பாக மூன்று நாட்கள் நடக்கும் சர்வதேச பொறியியல் கண்காட்சி நேற்று கொடிசியா வளாகத்தில்  துவங்கியது.தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் சம்பத், ஊரக மற்றும் சிறு தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், மத்திய அரசின் வர்த்தகதுறை செயலாளர் டாக்டர் அனுப் வாதவன், தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் துறைக்கான முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார், மாவட்ட கலெக்டர் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் அமைச்சர் பென்ஜமின் பேசியதாவது:- இந்தியாவில் மும்பையில் மட்டுமே நடந்து வந்த இந்த சர்வதேச கண்காட்சி, கடந்த 4 முறை தென்னிந்தியாவிலும், இந்தாண்டு கோவையில் நடத்துவதற்கு நன்றி. தகவல் தொழில்நுட்பவியல், பம்ப்செட், கிரைண்டர், ஜவுளி, ஆட்டோமொபைல் ஆகிய பல்வேறு தொழில் துறையில் முன்னணியாக உள்ள கோவையில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பு. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் போட்டி சூழலை சமாளிக்கும் வகையிலும், பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 11 ஆயிரத்து 508 எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களால் 17 ஆயிரத்து 810 கோடி ரூபாய் முதலீடுகளும், 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் 36 தொழிற் பேட்டைகள் அறிவிக்கப்பட்டதில், 23 தொழிற் பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 368 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி, எம்.எஸ்.எம்.இ, நிறுவனங்களுக்கு அதிகளவில் பயனளிக்கும் என்று நம்புகிறேன். எம்.எஸ்.எம்.இ.க்கு இந்த கண்காட்சியில் 120 அரங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் சம்பத் பேசியதாவது:- தொழில்நுட்ப மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், பாரம்பரிய தொழிற்துறை மேம்பாட்டிற்கும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பொறியியல் ஏற்றுமதியில் தமிழகம் 3வது இடத்தை தக்க வைத்துள்ளது. நாட்டிலேயே எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகளவில் உள்ளது. ராணுவ தளவாடங்கள், ஏரோ ஸ்பேஸ் தொழிற்துறை ஏற்றுமதியிலும் தமிழகம் முன்னணி வகிக்கிறது. நேனோ தொழில்நுட்பம், எலக்ட்ரானிக் தொழில்துறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். நாட்டில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது. 2019 முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதில், 59 திட்டங்கள் துவங்கப்பட்டு விட்டது, 209 செயல்படுத்தும் நடவடிக்கையில் உள்ளது. 88.15 சதவீத  பணிகள் வெற்றியை அடுத்து, 63 புதிய திட்டங்களை தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

புதிய நிறுவனங்கள் பதிவு முழுவதும் இணையதளம் மூலம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையை இணைத்தும் இண்டஸ்ட்ரியல் காரிடரை பிரதமர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி. ராணுவ இண்டஸ்ட்ரியல் காரிடாருக்கென பிரத்யேக சிறப்பு செல் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து கோவை நகரில் தொழில் வளர்ச்சிக்கு என அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கண்காட்சியில் 400க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் புகழ் பெற்ற சர்வதேச மற்றும் இந்திய பொறியியல் நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளன.

Tags : International Engineering Exhibition ,Coimbatore ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...