×

தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் ஆமை வேகத்தில் நடக்கும் பொதுமேலாண்மை திட்ட பரிமாற்றம் வளர்ச்சி பணிகள் முடங்குவதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் வேதனை

கலசபாக்கம், மார்ச் 5: தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் பொதுமேலாண்மை திட்ட பரிமாற்றம் ஆமை வேகத்தில் நடப்பதால் வளர்ச்சி பணிகள் முடங்குவதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து, புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் கடந்த ஜனவரி 6ம் தேதி பதவி ஏற்றனர். தற்போது, உள்ளாட்சி நிர்வாகத்தில் பணப் பரிமாற்றம் செய்வதில் பல்ேவறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தில் பொது நிதி, மின்கட்டண நிதி, திட்ட நிதி, பணியாளர் ஊதியம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மத்திய அரசு மானிய நிதி, மாநில அரசு மானிய நிதி உட்பட 7 வகையான நிதிகள் மூலம், பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மின்கட்டணம் செலுத்துவதற்கு மட்டுமே காசோலை வழங்க வேண்டும். இதர பணிகளுக்கு பொதுநிதி மேலாண்மை திட்டத்தின் மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பணப் பரிமாற்றம் செய்வதற்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் தனித்தனியாக பாஸ்வேர்டு(கடவுச்சொல்), யுஸர்வேர்டு(பயனர் ஐடி) வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுநிதி மேலாண்மை திட்டத்தில் பரிமாற்றம் செய்வதில் ஊராட்சி செயலாளர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கவில்லை. மேலும், 7 வகையான நிதிகளில் பொது நிதி, சம்பள நிதி மட்டுமே தற்போது பரிமாற்றம் செய்யப்படுகிறது. மீதமுள்ள நிதிகளில் இருந்து பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணியாற்ற முடியாமல் வேதனை அடைந்துள்ளனர். மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு, மாநில நிதி குழு மானியத்தில் இருந்து ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் கூட உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்தவும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். கோடைகாலம் தொடங்க உள்ளதால் குடிநீர் பிரச்னையை சமாளிக்க வேண்டியது உளளது. போதிய நிதி ஆதாரம் இருந்தால் மட்டுமே குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியும். எனவே, உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்தவும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், பொது நிதி மேலாண்மை திட்ட பரிமாற்றத்தை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Representatives ,panchayats ,Tamil Nadu ,state ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...