×

நீதிமன்ற கட்டிடத்திற்கு இடம் ஒதுக்கக்கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு: வந்தவாசியில் பரபரப்பு

வந்தவாசி, மார்ச் 5: வந்தவாசியில் நீதிமன்ற கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி வக்கீல்கள் நேற்று தொடங்கி 4 நாட்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வந்தவாசி நீதிமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பழைய கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாததால் சிவில் வழக்கு நடத்துவதற்கு, ஏற்கனவே உள்ள கட்டிடத்தின் அருகில் சிமென்ட் சீட்டாலான கூரை அமைத்து நீதிமன்றம் நடந்து வருகின்றது.  மேலும், சார்பு நீதிமன்றம் செயல்பட உள்ள நிலையில் அதற்கான கட்டிட வசதி இல்லாததால், புதிய கட்டிடம் கட்ட மாநில நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியை வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர். இதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கும் பணி தடை ஏற்பட்டது.  இதுகுறித்து வக்கீல்கள், சட்டத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர், உயர் நீதிமன்ற பதிவாளர், மாவட்ட நீதிபதி ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, அதற்கான இடத்தினை வக்கீல்களை தேர்வு செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தென்னாங்கூர், மும்முனி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டனர்.

இதில் மும்முனி கிராமத்தில் உள்ள இடத்தில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் ஏற்படுத்தினால், பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும் என வருவாய்த்துறையினருக்கு அறிவுறுத்தினர். ஆனால், இங்கு போதுமான இடம் இல்லை என்று வருவாய்த்துறையினர் வழங்க மறுத்தாக கூறப்படுகிறது. இதனை தோப்பு பகுதியாக கருதி மும்முனி கிராமத்தில் உள்ள இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று வந்தவாசி வக்கீல்கள் சங்கம் சார்பில் அவசர கூட்டம் நடத்தினர்.சங்க தலைவர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயலாளர் அன்பரசு, பொருளாளர் சதாசிவம், வக்கீல்கள் நேதாஜி, செந்தில்குமார், ராமன், வெங்கடேசன், ஜோதிகா உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, கோர்ட் அமைய இடம் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று(நேற்று) தொடங்கி வரும் 7ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோர்ட் பணிகளை புறக்கணித்து போராட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனால் நேற்று வக்கீல்கள் யாரும் கோர்ட்டிற்கு செல்லாததால் நீதிமன்ற பணிகள் முடங்கியது.

Tags : lawyers ,Vandavasi ,
× RELATED திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில்...