×

காவல் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் 45 ஏட்டுகளுக்கு எஸ்எஸ்ஐகளாக பதவி உயர்வு பட்டியல் தயார்

நாகர்கோவில், மார்ச் 5: குமரி மாவட்டத்தில் காவல் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய சுமார் 45 பேருக்கு எஸ்எஸ்ஐகளாக பதவி உயர்வு வழங்கப்பட இருக்கிறது.  தமிழகத்தில் காவலர் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு காவலர் பயிற்சிப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 6 மாதம் பயிற்சி முடிந்த பின்னர் இவர்கள் பட்டாலியன் பிரிவில் 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய பின்னர் ஆயுதப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்.  மேலும் தேர்வு வாரியத்தின் மூலம் காவலர் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் காவலர், தீயணைப்புத் துறை, சிறைத்துறை என பிரிக்கப்பட்டு பணி அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் பட்டாலியன், தனி ஆயுதப்படைகளில் பணியாற்றிய பின்னர் காவல் நிலையங்களில் ஏற்படும் காவலர் தேவை அடிப்படையில் அந்தந்த பகுதி காவல்நிலையங்களில் பணி அமர்த்தப்படுகின்றனர்.
 காவல்நிலையங்களில் பணியில் சேரும் காவலர்களுக்கு 10 ஆண்டுகளில் முதல்நிலை காவலராகவும், 15ம் ஆண்டில் தலைமைக் காவலர், 20ம் ஆண்டில் முழுமைபெற்ற தலைமைக் காவலர் உள்ளிட்ட பதவி உயர்வுகள் வழங்கப்படுகிறது. இதில் 25 ஆண்டுகள் பூர்த்தி செய்கின்றவர்கள் எஸ்எஸ்ஐகளாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

 பணியில் சேர்ந்த பின்னர் துறை ரீதியாக எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத தலைமைக் காவலர்களுக்கு மட்டுமே 25 ஆண்டுகளுக்குப் பின்னர் எஸ்எஸ்ஐ பதவி உயர்வு வழங்கப்படுகிறது.  குமரி மாவட்டத்தில் 1.3.1995ம் ஆண்டு காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் தற்போது வரை 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தலைமை காவலர்களாக 10 ஆண்டுகள் பணியாற்றி, 5  ஆண்டுகள் எந்தவித தண்டனைகளின்றி தலைமை காவலர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக எஸ்எஸ்ஐ பணி நிலை உயர்வு பெறுகின்றனர். இவர்கள் மீது ஏதாவது தண்டனைகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட தலைமை காவலர்களுக்கு வழங்கப்பட்ட பணி நிலை  உயர்வு ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு நெல்லை சரக டிஐஜிக்கு கடந்த  மார்ச் 2ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. அவரது ஒப்புதல் பெற்ற பின்னர் குமரி மாவட்ட எஸ்.பி இது தொடர்பான உத்தரவை பிறப்பிப்பார். மாவட்டத்தில் காவல்நிலையங்களில் சுமார் 40க்கும் மேற்பட்டவர்களும், ஆயுதப்படையில் 5 பேரும் என்று மொத்தம் 45 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிகிறது.

Tags : police force ,
× RELATED தேசிய பாய் மர படகு போட்டி: ஆவடி மத்திய...