×

குமரியில் சொகுசு காரில் ஆடுகளை திருடும் கும்பல் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது

நாகர்கோவில், மார்ச் 5 : குமரியில் சொகுசு காரில் ஆடுகளை திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். குமரியில்,  ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், மருங்கூர், கோழிக்ேகாட்டு பொற்றை,  தாழக்குடி, சீதப்பால் போன்ற பகுதிகளில் ஆடுகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.  பகல் பொழுதில் இவற்றை மேய்ச்சலுக்காக விவசாயிகள் விடுகின்றனர். இதனை  மேய்க்க சில நேரங்களில் வளர்ப்பவர்கள் உடனிருப்பதில்லை. இதனை பயன்படுத்தி  மேற்கண்ட பகுதிகளில் ஆடு திருடும் கும்பல் கடந்த ஓராண்டுகளாக ஆடுகளை திருடி  வருகிறது. இரவில் மட்டுமின்றி, பட்ட பகலிலும் வளர்ந்த ஆடுகளை  திருடி செல்கின்றனர். குறிப்பாக ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு  உட்பட்ட பகுதிகளில் வாரத்திற்கு இரு சம்பவங்களாவது இது போன்று நடைபெறுகிறது.  சில நேரங்களில் திருட்டில் சம்பந்தப்பட்டவர்களை ஆடுகளை பறிகொடுத்தவர்கள்  சுட்டி காட்டினாலும், ஆதாரம் இல்லை என அவர்களை விடுவிக்கும் நிலையே உள்ளது.  

இந்நிலையில், கடந்த 26ம் தேதி மாலை 4.45 மணிக்கு  சீதப்பால்  ஆற்றங்கரை காலனியில் குருசடி முன்பு சொகுசு கார் ஒன்று வந்து நின்றது.  அப்போது, காரின் முன்சீட்டில் இருந்து இறங்கிய வாலிபர், அப்பகுதியில்  மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் கொழுத்து வளர்ந்த ஆட்டை காரின் அருகே  வரவழைத்து, காரின் பின்சீட்டில் தூக்கி போட்டுள்ளார். இதனை கண்ட அப்பகுதி  விவசாயி ஒருவர் காரை நோக்கி ஓடி வர கார் அங்கிருந்து வேகமாக  கிளம்பி விட்டது.
இதனால், பின்னால் பைக்கில் வந்த வாலிபரிடம்,  லிப்ட் கேட்டு காரை பிடிக்க விவசாயி கூறியபோது, பைக்கை நிறுத்தாமல் சென்று  விட்டார். இதுபற்றி, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சோதனை சாவடியில் குறிப்பிட்ட காரை  அடையாளம் காண கூறினர். ஆனால், சம்மந்தப்பட்ட போலீஸ்காரர் இதனை கண்டு  கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.

இதற்கிடையே குருசடியில் உள்ள  கண்காணிப்பு கேமராவில் ஆடு திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.  மேலும், ஆட்டை திருடிய கும்பல் சற்று தள்ளி திருப்பத்தில் காரை சாலையோரம்  நிறுத்த முயலும் காட்சியும் அப்போது பின்னால் பைக்கில் வந்த வாலிபர்  சிக்னல் தந்ததும், கார் மீண்டும் வேகமாக கிளம்பும் காட்சி மற்றொரு வீட்டு கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும், சிவன் கோயில் பகுதியில் உள்ள கேமராவில் அந்த காரும், பைக்கும் சென்றது பதிவாகவில்லை. எனவே அவர்கள்,  தோவாளை கால்வாய் பகுதியில் நின்று கண்காணித்து  திட்டமிட்டு ஆட்டை  திருடி சென்றது தெரியவந்தது. ஏற்கனவே கடந்த ஒரு சில மாதங்களில்  4க்கும் மேற்பட்ட ஆடு திருட்டு சம்பவங்கள் இதே பகுதியில் நடைபெற்றுள்ளது.  இதுபோல் சொகுசு சாரில் வந்து தாழக்குடி பகுதியில் ஆடு திருடிய சம்பவமும்  நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த புகார்களை போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளதால்,  தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Tags : gang ,Kumari ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....