×

கோட்டாறு - செட்டிக்குளம் சாலை விரிவாக்கத்திற்கு இலவச நிலம் கேட்டு மாநகராட்சி மிரட்டல்

நாகர்கோவில், மார்ச் 5:  நாகர்கோவிலில் கோட்டாறு-செட்டிக்குளம் இடையே சாலை விரிவாக்கத்திற்கு இலவசமாக நிலம் கேட்டு மாநகராட்சி ஆணையர் மிரட்டுவதாக கூறி நெடுஞ்சாலைத்துறையிடம் வணிகர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அதன் மாவட்ட தலைவர் டேவிட்சன், செயலாளர் நாராயண ராஜா, பொருளாளர் ராஜதுரை, துணைத்தலைவர் கிராஸ் அருள்ராஜ், ஜேம்ஸ் மார்ஷல், கதிரேசன் உட்பட நிர்வாகிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:  நாகர்கோவில் செட்டிக்குளம் - கோட்டாறு மேம்பாலம் மற்றும் வடசேரி மேம்பாலம் ஆகிய திட்டங்களை நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக கோட்டாறு பகுதியில் நிலம் அளவீடும் செய்யப்பட்டது.

வர்த்தக பகுதியில் இந்த மேம்பால திட்டங்களை நிறைவேற்றினால் பெருமளவு கடைகளை இடிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே நான்குவழி சாலை பணிகள் நிறைவடைந்த பிறகு, இங்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டால் இந்த மேம்பால திட்டங்களை நிறைவேற்றலாம் என வணிகர்கள் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரால் கோட்டாறு - செட்டிக்குளம் மேம்பால திட்ட அறிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரிவான திட்ட பணிகள் நடத்தப்பட ₹90 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பாலப்பணியை உடனே தொடங்க உள்ள நிலையில், திட்டத்தை கைவிட வாய்ப்பில்லை என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் மற்றொருபுறம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள கோட்டாறு - செட்டிக்குளம் - பார்வதிபுரம் ரோடு ஆகியவற்றில் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி இடிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் நகராட்சி அதிகாரிகளை அனுப்பி கடைகளில் வாடகைக்கு இருப்பவர்களை மிரட்டும் நிலை உள்ளது.

வணிகர்களை பொறுத்தவரை, பாலப்பணிகளுக்கு இடம் கையகப்படுத்தினால் அதற்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். அதை விடுத்து மாநகராட்சி ஒரு பகுதியிலும், நெடுஞ்சாலைத்துறை மறு பகுதியிலும் கடைகளை இடிக்க மேற்கொள்ளும் வணிக விரோத நடவடிக்கைகள் ஏற்றுக்கெள்ள கூடியதல்ல. எனவே கோட்டாறு முதல் செட்டிக்குளம் வரையிலான மேம்பால பணி சாலையோர கடைகளை கையப்படுத்தி தொடங்கவுள்ள நிலையில், சாலை விரிவாக்கத்துக்கு நிலம் இலவசமாக கேட்டு மிரட்டுவது ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கை இல்லை. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED 175 ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி