×

கோர்ட்டில் சரணடைந்த நகை மதிப்பீட்டாளரிடம் விசாரணை

சேலம், மார்ச் 4: சேலத்தில் கவரிங் நகையை அடகு வைத்து ₹94 லட்சம் மோசடி செய்த வழக்கில் சரணடைந்த நகை மதிப்பீட்டாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகளும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. சேலம் நான்கு ரோடு பகுதியில் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக இருந்த சக்திவேல் என்பவர் 4,000 கிராம் கவரிங் நகைகளை வைத்து சுமார் ₹94 லட்சம் மோசடி செய்துள்ளதாகவும், இந்த போலி நகைகளை 24 பேர் அடகு வைத்துள்ளதாகவும் சேலம் மத்திய குற்றப்பிரிவில் வங்கி அதிகாரி தெய்வமணி புகார் அளித்தார்.இதையடுத்து எஸ்.ஐ., கலைவாணி வழக்கு பதிவு செய்து, நகை மதிப்பீட்டாளர் சக்திவேலை தேடி வந்தார். போலீசார் தேடுவதை தெரிந்துகொண்ட அவர், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதித்துறை நடுவர் சிவா, 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து போலீசார் நகைமதிப்பீட்டாளர் சக்திவேலிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடிக்கு துணையாக இருந்த வங்கி அதிகாரிகளும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

Tags : jeweler appraiser ,court ,
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...