×

மேம்பால, பாதாள சாக்கடை பணிகளால் மாநகரில் போக்குவரத்து கடும் நெரிசல்

சேலம், மார்ச் 4: சேலம் மாநகரில் 10 ஆண்டாக நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணியால், சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலைகளில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் தத்தளித்து வருகின்றனர். சேலம் மாநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணி ₹149.39 கோடியில் 2009ம் ஆண்டு தொடங்கியது. மாநகராட்சி பகுதியில் 421.67 கிலோ மீட்டர் நீளத்துக்கு கழிவு நீர் குழாய் பதித்து, அதற்கான ஆள் இறங்கும் தொட்டி மற்றும் வீட்டிணைப்பு வழங்குதல் ஆகியவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஆனால் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 10 ஆண்டுகளை தாண்டியும் இன்னும் முடிய வில்லை. இப்பணிகளுக்காக சேலம் மாநகராட்சியின் பெரும்பாலான சாலைகள் சிதைக்கப்பட்டன. தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூடாமல் அப்படியே விட்டுச்செல்லப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனிடையே, தற்போது சின்ன கடை வீதி, 1வது, 2வது அக்ரஹாரம், பஜார் வீதி, கோட்டை, பழைய பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் சாலை, மூன்று ரோடு, லீபஜார் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக குழி தோண்டப்பட்டு வருகிறது. இதனால் சாலைகள் சிதைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியும், ஈரடுக்கு மேம்பால பணியும் நடந்து வருவதால், மாநகரில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அதன் காரணமாக மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த சாலைகளை சீர் செய்யாததால், அங்கு மண் புழுதி பறக்கிறது. இதனால் காற்றில் மாசு ஏற்பட்டு அந்த சாலைகள் வழியாக  செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. புழுதிபறக்கும் சாலைகளால், வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொது மக்களுக்கு ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற வியாதிகள் ஏற்படுகிறது. கடந்த 5 மாதத்திற்கு முன்பு சின்ன கடைவீதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியால், வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும் போது மண் புழுதி பறக்கிறது. அங்கு வியாபாரம் செய்ய முடியவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ் கூறுகையில், செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்டு வரும் லீ பஜார் பாலம் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த பணியால்  அங்குள்ளசாலை மோசமடைந்து காணப்படுகிறது. புழுதி பறக்கும் சாலை  வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநகரில் முக்கிய சாலைகள் சிதைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளை போர்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும், என்றார்.   

வணிகர்கள் பேரமைப்பு மாவட்ட தலைவர் பெரியசாமி கூறுகையில், ‘‘சேலம் மாநகரில் கடந்த 3 ஆண்டாக மக்கள் அதிகம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டி வருகின்றனர். அந்த பணியை விரைந்து முடிக்காமல் அப்படி போட்டு விட்டு செல்கின்றனர். சின்ன கடைவீதி, முதல், இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்பட்ட குழியால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் மண் புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் செல்ல முடியவில்லை. முக்கி சாலைகளில் இந்த பாதாள சாக்கடை பணி நடப்பதால் மாநகரில் மற்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பணியை போர்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும்,’’ என்றார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி சதீஷ் கூறுகையில், ‘‘லீபஜார் பகுதியில் 6 ஆண்டாக மேம்பாலம் அமைக்கப்பட்டுவருகிறது. இதனால் லீபஜார் சாலையில் மண் புழுதியாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. கண்ணில் மண் புழுதி விழுவதால், கண் சிவந்து விடுகிறது. இதற்காக மருத்துவ செலவு ஏற்படுகிறது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் ₹150 கோடிக்கு மேல் பாதாள சாக்கடை பணி முடிக்கப்பட்ட சாலையில் தார் சாலை போட்டப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அந்த சாலை சிதைக்கப்பட்டு வருகிறது. மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. 26வது வார்டு சின்னேரி வயல்காடு பகுதியில் பழுதடைந்த சாலைக்கு தார் சாலை போட வேண்டும் என பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை,’’ என்றார்.

தவறி விழும் வாகன ஓட்டிகள்
சேலம் டவுன் முதல் அக்ரஹாரம், 2வது அக்ரஹாரம், கடைவீதி சாலைகளில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி கடந்த 8 மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் தற்போது, தனியார் தொலைபேசி கேபிள் பதிக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளனர். முதல் அக்ரஹாரத்தில், ஆற்றோர காய்கறி மார்க்கெட்டிற்கு செல்லும் வாசவிசாலை சந்திப்பு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன் பெரிய அளவில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க குழி தோண்டினர். அந்த இடத்தில் பணியை முடிக்காமல், அப்படியே குழியை போட்டு வைத்துள்ளனர்.இந்த பகுதி, கடைவீதியின் முக்கிய சாலை என்பதால், இருச்சக்கர வாகன ஓட்டிகள் அதிகளவு வந்துச் செல்கின்றனர். அதிகாலை வேளையிலும், இரவிலும் குழி இருப்பது தெரியாமல் பல வாகன ஓட்டிகள் தவறி விழுந்து வருகின்றனர். நேற்று காலை, அடுத்தடுத்து பைக்கில் வந்த 3 பேர், குழிக்குள் விழுந்து பலத்த காயமடைந்தனர். அவர்களை அப்பகுதியில் இருந்த வியாபாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரிய அளவில் குழி இருக்கும் நிலையில், அந்த இடத்தில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. அதேபோல் சிவப்பு துணியும் கட்டப்படவில்லை. இதனால், குழி இருப்பது தெரியாமல் பல வாகன ஓட்டிகள் வந்து தவறி விழுந்து வருகின்றனர். இதுபற்றி அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில், ‘‘கடைவீதியின் அனைத்து சாலைகளையும் தோண்டி போட்டுள்ளதால், கடும் அவதியடைந்து வருகிறோம். அதிலும், காய்கறி மார்க்கெட்டிற்கு செல்லும் முக்கிய சந்திப்பு பகுதியில் உள்ள இந்த குழியில் தினமும் 10க்கும் மேற்பட்டோர் தவறி விழுந்து வருகின்றனர். ஒரு எச்சரிக்கை பலகை அல்லது சிவப்பு துணியையாவது அதிகாரிகள் கட்டி வைக்க வேண்டும். அதை கூட செய்ய மறுக்கிறார்கள். மிக விரைவாக குழாய் மற்றும் தொலைபேசி கேபிள்களை பதித்து, குழியை மூட வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்,’’ என்றனர்.

Tags : city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்