×

சூளகிரி ஏரியில் செத்து மிதந்த மீன்கள்: துர்நாற்றத்தால் மக்கள் அவதி

சூளகிரி, மார்ச் 4: சூளகிரி ஊராட்சியில் உள்ள துரை ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். சூளகிரி ஊராட்சியில் பேரிகை செல்லும் சாலையில் 50 ஏக்கர் பரப்பளவில் துரை ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் சூளகிரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இதனால், விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும். இந்த ஏரிக்கு பல மாதமாக தண்ணீர் விட மறுக்கப்பட்ட நிலையில், தற்போது வரதாபுரம் ஏரிக்கு ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் தினகரன் செய்தி எதிரொலி காரணமாக சில தினங்களுக்கு முன் வரதாபுரம் ஏரி நிரப்பப்பட்டு, அதிலிருந்து துரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இந்த தண்ணீரில் அடித்து வரப்படும் லோகு, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் துரை ஏரியில் செத்து மிதக்கிறது. இதனால், ஏரியை சுற்றியுள்ள பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏரிக்கு புதிதாக தண்ணீர் வருவதால், ஏரியின் வெப்பதால் மீன்கள் இறந்திருக்கலாம் என தெரிகிறது. மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றத்தை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : lake ,
× RELATED தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்