×

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை மாசி தெப்போற்சவம்

திருச்சி, மார்ச் 4: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா வரும் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.  தெப்பத்திருவிழாவின் 7ம் நாளான இன்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான நாளை மாலை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார்.  இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 9ம் திருநாளான 6ம் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில்நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : event ,Aurangham Ranganathar Temple ,
× RELATED எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க...