×

கோரையாறு, வெண்ணாற்றில் மணல் திட்டுகளால் தண்ணீர் செல்வதில் சிக்கல்

நீடாமங்கலம், மார்ச் 4:கோரையாறு, வெண்ணாற்றில் நாணலுடன் மணல் திட்டுகள் அதிகம் உள்ளதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை விரைந்து சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லணையிலிருந்து பிரிந்து வரும் வெண்ணாறு நீடாமங்கலம் ஒன்றியம் நகர் ஊராட்சி பன்னிமங்கலம் கிராமத்தில் வந்து அங்கு மூணாறு தலைப்பு அணை என்ற இடத்திற்குவந்து மூன்று ஆறுகள் பிரிகிறது. இந்த ஆறுகளில் பாமணியாறு 38,357 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதியும், கோரையாறு 1 லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கள் விளைநிலங்களுக்கும், சிறிய வெண்ணாறு 94,219 ஏக்கள் விளைநிலங்களுக்கும் பாசன தண்ணீர் கொடுக்கிறது.இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பலமுறை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாமணியாற்றில் வெள்ளங்குழி, சித்தமல்லி, பரப்பனாமேடு, பூவனூர், ராயபுரம் பாலம் உள்ளிட்ட இடங்களில் ஆறுகளின் நடுவில் நாணல், சீமை காட்டாமணக்கு போன்ற செடிகள் அதிகளவில் மண்ணடி கிடந்தது. இதனால் சீராக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்தான செய்தி தினகரனில் அடிக்கடி வெளி வந்ததால், ஆண்டு தோறும் பாமணியாறு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெண்ணாற்றில் மேட்டுச்சாலை, நடுப்படுவை, பாப்பையன் தோப்பு, பழைய நீடாமங்கலம், அனுமந்தபுரம், வயகளத்தூர், ஒளிமதி, பழங்களத்தூர், கிளரியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆறுகளில் மணல் மேடுகள் திட்டு திட்டாக ஏக்கர் கணக்கில் உள்ளது. சில இடங்களில் ஆறுகளின் நடுவில் பெரிய மரங்கள் உள்ளது. இதில் கடந்தாண்டு ஒருசில இடத்தில் மட்டும்தான் தூர்வாரப்பட்டது. மேலும் அதிக இடங்களில் மணல் திட்டுகள் உள்ளது.

கோரையாற்றில் ஒரத்தூர், நீடாமங்கலம் பெரியார் தெரு, கொத்தமங்கலம், பெரம்பூர், கண்ணம்பாடி, வரதராஜ பெருமாள் கட்டளை, காரிச்சாங்குடி, கீழாளவந்தசேரி, தண்டாலம், கருவேலங்குளம், வெள்ளக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆற்றின் நடுவே நாணல்கள் மண்டி திட்டு திட்டாக உள்ளது. இந்த செய்திகள் தினகரன் நாளிதழில் பலமுறை வெளியாகியும் ஒருசில இடங்களில் மட்டுமே திட்டுகள் அகற்றப்பட்டது. பெருப்பாலான இடங்களில் அதிக மணல் திட்டுகள் உள்ளது. மணல் திட்டுகளால் ஆற்றில் தண்ணீர் வரும்போது தேக்கம் அடைந்து பாசனத்திற்கு தண்ணீர் ஏரி பாய்வதில்லை. விவசாயிகளின் நலன்கருதி பாமணியாறு தூர் வாருவதுபோல் கோரையாற்றில் அமைந்துள்ள மணல் திட்டுகளையும், வெண்ணாற்றில் நடுவில் அமைந்துள்ள மணல் திட்டுகளையும் தூர்வாரி விவசாயத்திற்கு தேக்கமின்றி தண்ணீர் வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sand dunes ,
× RELATED 80 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பென்னா...