×

திருநின்றவூரில் இருந்து தாம்பரத்துக்கு 400அடி சாலையில் மாநகர பஸ் இயக்க கோரிக்கை

திருநின்றவூர்,  மார்ச் 4; ஆவடியை அடுத்த திருநின்றவூரில் இருந்து தாம்பரத்திற்கு நேரடியாக பஸ் வசதியின்றி பல ஆண்டாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க,  நெமிலிச்சேரி-வண்டலூர் 400 அடி வெளிவட்ட சாலை வழியாக புதிய வழித்தடத்தில் மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னையை ஒட்டி திருநின்றவூர் பேரூராட்சி உள்ளது. இதனை சுற்றி பாக்கம், நடுக்குத்தகை, நெமிலிச்சேரி, நத்தம்பேடு, கொசவன்பாளையம், மேலப்பேடு, மேல்கொண்டயார், வேப்பம்பட்டு, பாலவேடு உள்ளிட்ட ஊராட்சிகளும் உள்ளன. மேற்கண்ட பகுதிகளில் ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, திருநின்றவூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாம்பரம், வண்டலூர், மறைமலை நகர், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.  மேலும், இவர்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக தாம்பரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று வரவேண்டுமானால் பலகிலோ மீட்டர்தூரம் சுற்றித்தான் ரயில், பஸ் மூலம் செல்ல வேண்டியது உள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருநின்றவூர் சுற்றுப்புறத்தை சேர்ந்த பொதுமக்கள் தாம்பரத்திற்கு ரயில் மூலம் செல்ல வேண்டுமானால் சென்ட்ரல்,  கடற்கரை மார்க்கம் சென்றுதான் செல்ல வேண்டும். மேலும், அவர்கள் பேருந்தின் மூலம் செல்லவேண்டுமானால் ஆவடி  வந்து, அதன் பிறகு பூந்தமல்லி வழியாக செல்ல வேண்டும்.

மேற்கண்ட பகுதி மக்களுக்கு திருநின்றவூரில் இருந்து நேரடியாக தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லை. இவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்வதால் காலவிரயமும், பணவிரயம் ஏற்படுகின்றன.
இதனால், மேற்கண்ட பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டுத்தான் தாம்பரம் சென்று வருகின்றனர். இதனை தவிர்க்க, திருநின்றவூரில் இருந்து நெமிலிச்சேரி-வண்டலூர் 400 அடி வெளிவட்ட  சாலை வழியாக தாம்பரத்துக்கு பேருந்துகளை இயக்கவேண்டும். அப்படிச் செய்தால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். அதே நேரத்தில் கால, பண விரயம் குறையும். இது கறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் அனுப்பியுள்ளனர் இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகவே உள்ளனர்.  இதனால் திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் தொடர்ந்து கடும் அவதிப்படுகின்றனர். எனவே மாநகர போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கவனித்து திருநின்றவூரில் இருந்து தாம்பரத்திற்கு,  நெமிலிச்சேரி-வண்டலூர் 400 அடி வெளிவட்ட சாலை வழியாக நேரடியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Road ,Tambaram ,Thiruninvur ,
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...