×

கொத்தடிமை தொழிலாளர்களை ஒழிக்க செங்கல்சூளை உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை

திருவள்ளூர், மார்ச் 4: திருவள்ளுர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறை சார்பில், தொழில் வளர்ச்சி பாதிக்காத வகையில் கொத்தடிமை தொழிலாளர்களை ஒழிப்பது குறித்து, செங்கல் சூளை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் சி.வித்யா தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில் முன்னிலை வகித்தார். துணை வட்டாட்சியர் வெங்கடேசன் வரவேற்றார். கூட்டத்தில் கோட்டாட்சியர் வித்யா பேசியதாவது:
செங்கல் சூளைத் தொழிலை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூளைகளுக்கு தேவையான தொழிலாளர்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து முன்பணம் கொடுத்து அழைத்து வருவதோடு, ஓய்வின்றி வேலை வாங்குவது கொத்தடிமை தொழில்தான்வெளி மாநிலங்களுக்கு அவசர காரியமாக சென்றால், திரும்பி வரும் வரை 2,3 வயது குழந்தைகளை செங்கல் சூளைகளில் விட்டுச் செல்லவும் வலியுறுத்தக்கூடாது. இதுபோன்று செய்வதால் முதலில் வேலை செய்வதற்கு விருப்பத்துடன் வந்து, ஏன் வந்தோம் என்ற நிலைக்கு தொழிலாளர்களை தள்ளிவிடக்கூடாது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் இல்லாத நிலை உள்ளது. அதனால், இனி வருங்காலங்களில் தொழிலாளர்களின் முழு விவரங்களான ஆதார் அடையாள அட்டை மற்றும் பெயர் விவரங்களை பதிவேடுகளில் பராமரிப்பு செய்து வர வேண்டும்.

அதேபோல், வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் நலத்துறை அளிக்கவும் வேண்டும். எக்காரணம் கொண்டும் செங்கல்சூளை வளாகத்தில் போலி மருத்துவர்களை கொண்டு கிளினிக் நடத்தவும் கூடாது. தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுதான் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.எனவே செங்கல் சூளைத் தொழில் வளர்ச்சி பாதிக்காமல், கொடித்தடிமை தொழிலாளர்களை ஒழிக்க அவசியம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் செந்தில் பேசுகையில், ‘’செங்கல் சூளைகளில் 18 வயதுக்கு குறைவானவர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. அப்படி ஈடுபடுத்தினால் குழந்தை தொழிலாளர்கள் சட்டம் அங்கு வரும். புலம் பெயர்ந்து வரும் குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடிக்கும், பள்ளிக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொழிலாளர்களின் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், குழந்தை திருமணங்களையும் ஆதரிக்க கூடாது’’ என்றார்.

இதையடுத்து செங்கல்சூளை உரிமையாளர்கள் பேசுகையில், ‘’ஒவ்வொருவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டுதான் தொழில் நடத்துகின்றோம். ஆனால், தற்போதைய நிலையில் பல்வேறு சிரமங்களையும், எதிர்கொள்ளும் பிரச்னைகள் அதிகம் உள்ளது.  தொண்டு நிறுவனங்ளைச் சேர்ந்தவர்களால் தான் அதிகம் தொழில் பாதிப்பு உள்ளது. அதனால், இத்தொழில் செய்வதில் பிரச்னைகளை நிவர்த்தி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், செங்கல்சூளை தொழில் மூலம் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்’’ என்றனர்.இதில், முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணு,  செங்கல் மற்றும் ஓடு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆர். வெங்கடேசன், பாண்டுரங்கன், எஸ் ரகுபதி, சீனிவாசன், ஜெயகுமார், சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Revenue officials ,bricklayer owners ,poultry workers ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 16 இடங்களில் வருமான அதிகாரிகள் சோதனை