×

போலி சிம் கார்டு மூலம் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது: கார் பறிமுதல்

பூந்தமல்லி, மார்ச் 4: போலி சிம் கார்டு மூலம் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களின்  பெற்றோர்கள் பயன்படுத்தும் செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள், கல்லூரியில் இருந்து பேசுவதாகவும், மாணவனின் கல்வி கட்டணம் இன்னும் கட்டாமல் உள்ளது. அதனை கட்ட வேண்டும், இல்லையென்றால் மாணவனை கல்லூரியில் இருந்து நீக்கி விடுவோம் என எச்சரித்துள்ளனர்.இதையடுத்து அழைப்பு வந்த பெற்றோர்கள், கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அப்போது கல்லூரி நிர்வாகத்தில் இருந்து யாரும் அதுபோல் சொல்லவில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து ராயலாநகர் காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து  அந்த செல்போன் நம்பர்களை வைத்து போலீசார் விசாரித்தனர்.  விசாரணையில், அவை போலியான செல்போன் நம்பர்கள் என தெரியவந்தது. இதையடுத்து செல்போன் சிம் கார்டுகளை விற்பனை செய்த ஏஜென்ட்டான பெங்களூரைச் சேர்ந்த செந்தில்குமார் (42) என்பவரை கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின் பேரில் கர்நாடகாவைச் சேர்ந்த ஷேக் அகமது (27), கேரளாவைச் சேர்ந்த சாதிக் (42), அப்துல் லதீப் (54) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், போலி சிம் கார்டுகளை தயாரித்து மிரட்டியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’கைது செய்யப்பட்ட 4 பேரில் செந்தில்குமார் ஏற்கனவே சிம் கார்டு விற்பனை செய்யும் ஏஜெண்டாக இருந்து வந்தார். சிம் கார்டு வாங்க வரும் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை வைத்து  போலியாக சிம் கார்டுகளை தயாரித்து, இவர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளார்.  தனியார் கல்லூரி மற்றும் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பட்டியலை சேகரித்து, கல்லூரிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பெற்றோர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதேபோல் பல இடங்களில் மிரட்டி பணம் பறித்துள்ளனர். இவர்களிடமிருந்து போலியான சிம் கார்டுகள், செல்போன் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சபீர், நவ்ஷாத் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.'

Tags : parents ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்