×

குடிநீர் தொழிற்சாலைகள் மூடினாலும் கடைகளுக்கு போலி குடிநீர் கேன் சப்ளை: டயாக்சின் கலப்பதால் கேன்சர் அபாயம்

திருவள்ளூர், மார்ச் 4: தமிழகம் முழுவதும் கடந்த 27ம் தேதி மாலை 6 மணி முதல் குடிநீர் கேன் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூரில் வழக்கம்போல குடிநீர் கேன்கள் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாத ஆலைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உரிமம் பெறுவதற்கான வழி முறைகளை அரசு விரைந்து உருவாக்க வேண்டும் என கூறி கேன் உரிமையாளர்கள் கடந்த 27ம் தேதி மாலை 6 மணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், திருவள்ளூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வழக்கம்போல போலி குடிநீர் கேன்கள் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கடும் வெயிலிலும், திறந்த நிலையில் உள்ள வாகனங்களில், கேன் வாட்டர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.  இதனால், வெயில் படும்போது பிளாஸ்டிக் உருகி தண்ணீருக்குள் செல்லும் ‘டயாக்ஸின்’’ நச்சுப்பொருளால், கேன்சர் உட்பட பல்வேறு நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. பிளாஸ்டிக் அபாயம் உணர்ந்த பெரிய கம்பெனிகள் தங்களது தயாரிப்புகளான அரை லிட்டர், ஒரு லிட்டர், 2 லிட்டர் வாட்டர் கேன்களை அட்டைப் பெட்டிக்குள் அடைத்து பக்குவமான முறையில் சப்ளை செய்கின்றனர். ஆனால், அதன் அபாயம் புரியாத  கடைக்காரர்கள், கேன்களை கடை முன் வெயிலில் அடுக்கி வைக்கின்றனர். அதேபோல் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும், 20 லிட்டர் பிளாஸ்டிக் கேன்களையும் வேன்களில் ஏற்றி செல்கின்றனர். அந்த வேன்களை பல மணி நேரம் வெயிலில் நிறுத்தி விடுகின்றனர். பலர் அக்னி வெயிலிலும் திறந்த நிலையில் மினி டெம்போக்களில் கொண்டு செல்கின்றனர்.

 வெயிலில், சில மணி நேரம் பிளாஸ்டிக் கேன்களை வைத்திருக்கும்போது, பிளாஸ்டிக்கில் இருந்து, ‘டயாக்ஸின்’’ என்ற நச்சுப்பொருள் வெளியேறி குடிநீரில் கலந்து விடுகிறது.  இந்த நீரை குடித்தால், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் உடல் உபாதைகள் ஏற்படும் அபாயங்கள் உள்ளன. எனவே, முறையாக குடிநீர் கேன்கள் சப்ளை செய்கிறார்களா என்பதை உணவுப்பொருள்  பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில், ‘டயாக்ஸின்’’ நச்சுப்பொருள் பிளாஸ்டிக் கேன்களின் வெயில் படும் போதெல்லாம் உருவாகும். இந்த நச்சுப்பொருள் கேனின் தன்மைக்கும் தரத்திற்கும் ஏற்ப அதிகமாகவோ, குறைவாகவோ உருவாகும். எவ்வளவு நச்சு உருவானாலும், இதனை குடிப்பதால் ஆபத்து தான். இதனால் பிளாஸ்டிக் கேன்களை வெயில்படாத இடங்களில் வைத்து பயன்படுத்த வேண்டும். நம்மிடம் அந்த கேன் வந்து சேரும் முன் பல மணி நேரம் வெயிலில் இருந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு. அது நமக்கு தெரியாமல் போகும். எனவே முடிந்த அளவு பிளாஸ்டிக் கேன்களை தவிர்த்து விட்டு, கண்ணாடி அல்லது சில்வர் பாட்டில்களை பயன்படுத்துவது சிறந்தது’’’ என்றனர்.

Tags : closure ,shops ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி