×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இடம் பற்றாக்குறையால் வராண்டாவில் சிகிச்சை பெறும் நோயாளிகள்: l ஒரே கட்டிலில் 2 பேர் படுக்கும் அவலம் l கண்டு கொள்ளாத சுகாதார துறை அதிகாரிகள்


செங்கல்பட்டு, மார்ச் 4: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், இட பற்றாக்குறையால், நோயாளிகளுக்கு வராண்டாவில் கட்டில் அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிலும், படுக்கை இல்லாததால், ஒரே கட்டிலில், 2 பேர் படுக்கும் அவல நிலை உள்ளது. இதுபற்றி பலமுறை சுகாதார துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் நலம், மன நலம், அவசர சிகிச்சை பிரிவு, பொதுநலம், சிறுநீரகம், இதயவியல், சிறுநீரகவியல், குழந்தைகள் அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, எலும்பு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தைகள் நலம், முடநீக்கியல், பொது அறுவை சிகிச்சை, மயக்கவியல், தோல் நோய் மருத்துவம், பால்வினை நோய், நுண்கதிர் வீச்சு, நரம்பியல் துறை, 24 மணிநேர ஆய்வகம் என அனைத்து பிரிவுகளுடன் செயல்படுகிறது.
இங்கு 1200 உள்நோயாளிகளும், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட புற நோயளிளும் தினமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை- திருச்சி, சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலைகள், சென்னை- புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை என அனைத்து சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் படுகாயம் அடைபவர்கள், இங்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.இந்த மருத்துவமனையின் முதல் மாடியில் பெண்களுக்கான உள்நோயாளிகள் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. இதனால், வராண்டாவில் படுக்கைகள் போட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வராண்டா பகுதியில் ஜன்னல்கள் இல்லாமல் கொசு வலை மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. அவ்வழியாக ஏற்படும் குளிர் காற்றால் நோயாளிகள் கடும் அவதியடைகின்றனர்.

இதே போன்று அவசர சிகிச்சை மையத்தின் அருகில் பார்வையாளர்கள் தங்குமிடம், ரத்த பரிசோதனை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள், மருத்துவமனை சாலையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிமென்ட் சாலைகள் பழுதடைந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு, இடம் இல்லாததால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால், மருத்துவமனை வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்படுவதாலும் நோயாளிகள் அவதிப்படுவதுடன், அவசர சிகிச்சைக்காக வாகனங்கள் செல்ல முடியாமலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உடல்நலனை கருதி போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த மருத்துவமனை நிர்வாகமும், சுகாதார துறையும் முன் வரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மட்டுமே பெரிய அளவில், அனைத்து வசதிகளுடன் கூடியதாக உள்ளது. இங்கு காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், உத்திரமேரூர், கூடுவாஞ்சேரி, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், வந்தவாசி உள்பட பல பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

ஆனால் இந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு தேவையான எவ்வித வசதியும் சரிவர செய்யவில்லை. குடிநீர், கழிப்பறை வசதிகள் மட்டுமே முன்பு பிரச்னையாக இருந்தது. ஆனால், தற்போது படுக்கை வசதியும் இல்லாமல் உள்ளது. இட பற்றாக்குறையால், மருத்துவமனை வராண்டாவில் கட்டில்போட்டு படுக்க வைக்கின்றனர். இன்னும் சில நாட்களில், மருத்துவமனை வெளியே உள்ள காலி இடத்தில் படுக்க வைப்பார்களோ என தோன்றுகிறது.இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடமும், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினர்.

Tags : Chengalpattu Government Hospital ,
× RELATED 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து...