×

மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டை ஏரியில் மழைநீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மதுராந்தகம், மார்ச் 4: மதுராந்தகம் அருகே மேலவம்பேட்டை ஏரி மழைநீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழைநீர் தேக்கி வைக்க முடியாமல் உள்ளது. இதையொட்டி அதில் செடி கொடிகள், கோரை புற்கள் வளர்ந்துள்ளன. இதனை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி மேலவலம்பேட்டை கிராமத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் விவசாய பாசன ஏரி அமைந்துள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கருங்குழி அருகே சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைகாலங்களில் நிரம்பும் தண்ணீர் மூலம் மேலவலம்பேட்டை, கக்கிலப்பேட்டை ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெற்று வருகிறது.  குறிப்பாக இந்த ஏரியின் அருகே உள்ள சாத்தமை கிராம மலைப்பகுதி மற்றும் காடுகளில் பொழியும் மழையின் காரணமாகவே நிரம்பி வந்தன.  இதையொட்டி, அப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களை தொடர்ந்து பயிர் செய்து தங்களது வாழ்வாதாரத்தை தக்க வைத்துள்ளனர்.

காட்டுப்பகுதி வழியாக இந்த ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்கள் அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்த நீர்வரத்து கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்துள்ளதால், நீர்வரத்து மிகமிகக் குறைந்தது. மேலும், கால்வாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் விட்டுவிட்டனர். இதனால், அங்கங்கே தூர்ந்து போய்விட்டது. இதனால், மழைநீர் ஏரிக்கு சென்றடைய முடியாமல் போனது. இதனால், மழை காலங்களில் சுற்றுப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பினாலும் இந்த ஏரி மட்டும் நிரம்புவதில்லை. இதனை நம்பி இருந்த  விவசாய குடும்பத்தினர் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். தற்போது இந்த ஏரியில் செடி கொடிகள் வளர்ந்து, மணல் மேடாக மாறி, பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து கருங்குழி பேரூராட்சி திமுக துணை செயலாளர் அர்ஜூனன் கூறுகையில், ‘கடந்த 2015ம் ஆண்டு இப்பகுதியில் பெய்த கனமழையின்போது இந்த ஏரி நிரம்பியது.  அதன்பிறகு, தற்போது வரை கடந்த 4 ஆண்டுகளாக சுமாரான மழை பெய்தாலும், இந்த ஏரி மட்டும் நிரம்பவில்லை. சுற்றிலும் உள்ள ஏரிகள் மற்றும் நீர் நிலைகள், குளங்கள் ஆகியவை நிரம்புகின்றன. இதற்கு காரணம், ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்படுவது இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள்தான்.  எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இந்த ஏரியை பார்வையிட்டு கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி முன்புபோல மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : lake ,Melawalampete ,Maduranthanam ,
× RELATED தண்ணீர் கிடைக்காமல் தவிப்புக்கு...