×

மாநகர பேருந்துகளில் இலவசமாக செல்ல புதிய பயண அட்டை வைத்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி: நடத்துனர்களுக்கு எம்டிசி நிர்வாகம் உத்தரவு

சென்னை: புதிய பயண அட்டை உள்ள கல்லூரி மாணவர்களை மட்டும் இலவசமாக பயணிக்க அனுமதிக்குமாறு, நடத்துனர்களுக்கு எம்டிசி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 3,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மாநிலங்களவை, மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள், நாடகக் கலைஞர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோருக்கு பயணச் சலுகை  வழங்கப்படுகிறது.

குறிப்பாக பள்ளி செல்வோரை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய குழந்தை மற்றும் தொழிலாளர் திட்ட நலப் பள்ளி, அரசு பல்தொழில்நுட்ப பயிலகங்கள், அரசு தொழிற்பயிற்சி கூடங்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு மாநகர பேருந்தில் கல்விக்கூடம் சென்று வருவதற்கான பயண கட்டணத்துக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுகின்றன. இதேபோல் தனியார் கல்லூரிகள், தொழில்நுட்ப பயிலகங்கள், பொறியியல் கல்லூரிகளில் படிப்போருக்கும் 50 சதவீத கட்டண சலுகை  வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் 2019-20 கல்வியாண்டுக்கான இலவச பேருந்து பயண அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இதனால் பழைய அட்டையைப் பயன்படுத்தி பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என நடத்துனர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் கல்லூரிகளில் இருந்து பெறப்பட்ட மனுக்களின்படி, இலவச பேருந்து பயண அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி புதிய பயண அட்டையை வைத்துள்ள கல்லூரி மாணவர்களை மட்டுமே பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கும்படி நடத்துனர்களுக்கு எம்டிசி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக எம்டிசி மேலாண் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி, கல்லூரி மாணவர்களின் முகவரி, வகுப்பு, பள்ளி மாற்றம் போன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு முந்தைய கல்வியாண்டில் வழங்கப்பட்ட இலவச பயண அட்டையை வைத்தே மாணவர்கள் நடப்பாண்டில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. தற்போது கல்லூரி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கான இலவச பேருந்து பயண அட்டை முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு புதிதாக வழங்கப்பட்ட இலவச பயண அட்டையுடன் பயணிப்பதை அனைத்து நடத்துனர்களும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையில் இருந்தாலும் மற்றும் அவர்கள் சென்ற ஆண்டு பெற்ற இலவச பயண அட்டையை மார்ச் 31ம் தேதி வரை, நடத்துனரிடம் காண்பித்து இலவசமாக தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரை பயணிக்க அனுமதிக்கும்படி உத்தரவிடப்படுகிறது. இதுகுறித்து துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் தமது போக்குவரத்து மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்திடவும், அனைத்து கிளை மேலாளர்கள் தமது பணிமனை நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : conductors ,
× RELATED வாக்களிப்பதற்கு எந்த வசதியும் செய்து...