×

புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் சிதிலமடைந்த நடைபாதையில் கழிவுநீர் தேக்கம்: துர்நாற்றத்தால் பொதுமக்கள் தவிப்பு

பெரம்பூர்: சென்னை மாநகராட்சியில் நடைபாதைகளை சீரமைக்க ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, பழைய நடைபாதைகளை உடைத்து அகற்றவிட்டு பெரிய அளவிலான புதிய நடைபாதைகள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு சீரமைக்கப்பட்ட நடைபாதைகள் குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர, பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியிலும், பார்க்கிங் பகுதியாகவும், கடைகளாகவும் காட்சியளிக்கிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. இதனால், பாதசாரிகள் அவற்றை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.

குறிப்பாக, வடசென்னை பகுதியில் உள்ள நடைபாதைகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. வாகனங்களை நிறுத்துவது, குப்பை கொட்டுவது, ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளிட்டவைகளால் நடைபாதைகள் மாயமாகி வருகிறது. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். அதேவேளையில் நடைபாதைகளை சீரமைக்க ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு மட்டும் செய்யப்படுகிறது. இந்த நிதி என்ன ஆனது, யார் ஒப்பந்தம் எடுத்தது போன்றவை மர்மமாகவே உள்ளது.

சென்னை மாநகராட்சி 6வது மண்டலம் 73வது வார்டுக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் அம்பேத்கர் கல்லூரி சாலையில், புளியந்தோப்பு காவல் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நடைபாதை மற்றும் அதையொட்டி உள்ள கால்வாய் சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், அருகிலுள்ள கட்டுமான நிறுவனங்களின் கழிவுநீர் தூர்ந்துள்ள கால்வாயில் வெளியேற்றப்படுவதால், நடைபாதை முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவர்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடசென்னையில் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றனர். இவர்கள், துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “கடந்த ஒரு வருட காலமாகவே இந்த நடைபாதை சிதலமடைந்து கிடைக்கிறது. இதில், குப்பை தேங்கியுள்ளன. இதை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்துவது கிடையாது. இதனால் குப்பைகள் மக்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நடைபாதை ஓரத்தில் உள்ள கால்வாயில் கழிவுநீர் விடப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பேருந்து நிறுத்தம் எதிரே சென்னை சமுதாய நல மருத்துவமனை செயல்படுகிறது. நாள்தோறும் நிறைய பெண்களும், குழந்தைகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். மேலும் அருகில் மகளிர் காவல் நிலையம் மற்றும் புளியந்தோப்பு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் நடைபாதையில் குப்பை மற்றும் கழிவுநீரும் தேங்கி, சுகாதார கேடாக திகழ்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சிதலமடைந்துள்ள நடைபாதை மற்றும் கால்வாயை சீரமைக்கவும், குப்பையை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

Tags : Sidewalk ,Puliyanthoppu ,Ambedkar College Road ,
× RELATED ஆவடி செக்போஸ்ட் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்