×

நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே முதியவர் சரமாரி வெட்டி கொலை: போலீசார் விசாரணை

சென்னை: மீஞ்சூர் அருகே முதியவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வட்டிக்கு பணம் கொடுத்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக இச்சம்பவம் நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரயிலில் வந்து இறங்கிய பயணிகள், அருகில் உள்ள சாலை வழியாக தங்களது பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், பலத்த வெட்டு காயங்களுடன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, மீஞ்சூர் போலீசாருக்கும், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்தது திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த சர்க்கரை (63) என்பதும், சவுகார்பேட்டை பகுதியில் உள்ள கடைக்காரர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததும் தெரிந்தது. எனவே, வட்டிக்கு பணம் கொடுத்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சக்கரைக்கு விமலா (55) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Murder ,railway station ,Nandiyambakkam ,
× RELATED பீஹார் கியூல் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து