×

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளார் பிறந்தநாள் கொண்டாட்டம்

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80வது பிறந்தநாள் விழா மேல்மருவத்தூரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக பல்வேறு வேல்வி பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை பங்காரு அடிகளார் பெற்றோரின் படங்களுக்கு, அவரது இல்லத்தில் தீபாராதனை செய்து வணங்கி வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மலர் ரதத்தில், சித்தர் பீடம் நோக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரதத்தின் முன்னும் பின்னும் சென்றனர். சித்தர் பீடம் வந்த அடிகளாருக்கு, பக்தர்கள் பாதபூஜை செய்து வரவேற்பளித்தனர். பிரகாரம் வலம் வந்த அவர், கருவறையிலும் புற்று மண்டபத்திலும் தீபாராதனை காட்டிய பின், அங்கே வைக்கப்பட்டிருந்த பிறந்தநாள் கேக்கை வெட்டி அங்கிருந்த குழந்தைகளுக்கு வழங்கினார்.

இதையடுத்து, சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு அலங்கார மேடையில் விழாவை முன்னின்று நடத்தும் ஆதிபராசக்தி இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், டாக்டர் ரமேஷ், தொழிலதிபர் உமாதேவி ஜெய்கணேஷ், மற்றும் சேலம், நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அதன் தலைவர்கள் பங்காரு அடிகளாருக்கு மரியாதை செய்து ஆசி பெற்றனர். அப்போது, முன்னாள் நீதிபதி முருகேசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் ரயில்வே பொது மேலாளர் எம்.எஸ்.ஜெயந்த், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றனர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய அருள் தரிசனத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காத்திருந்த பக்தர்கள் தொடர்ந்து வந்து அடிகளாரிடம் ஆசி பெற்று சென்றனர். அவர்களில் பல வெளிநாட்டு பக்தர்களும் இருந்தனர். வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு ஆதிபராசக்தி இயக்கத்தின் பல்வேறு அமைப்புகள் சார்பாக உணவு, தண்ணீர், மோர், ஐஸ்கிரீம், பால் ஆகியவை வழங்கப்பட்டன. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் வசிக்கும் செவ்வாடை பக்தர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். குறிப்பாக ஆம்புலன்ஸ் ஊர்தி இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த வழிபாட்டு மன்றத்தினர் செய்தனர்.

Tags : Bangaru Adikallar Birthday Celebration ,
× RELATED மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்...