×

கேன் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி தரமற்ற குடிநீரை விற்று காசு பார்க்கும் கும்பல்: டயாக்சின் கலப்பதால் கேன்சர் அபாயம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கேன் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, சிலர் தரமற்ற குடிநீரை கேன்களில் அடைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என விற்பனை செய்து வருகின்றனர். இதனை உணவு பாதுகாப்பு துறை கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு சார்பில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள இடங்களில் நிலத்தடி நீர் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி மாலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 1,689 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தினமும் விற்பனை செய்யக்கூடிய 20 லட்சம் குடிநீர் கேன்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை பொறுத்தவரை 450 குடிநீர் கேன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னை நகர் பகுதியில் குடிநீருக்கு பெரும்பாலான வீடுகளில் கேன் தண்ணீரையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தினமும் விநியோகிக்கப்படக்கூடிய 5 லட்சம் கேன் விற்பனை முடங்கியது.

கேன் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால் விற்பனையாளர்கள் பலர் கேன்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். கேன் குடிநீர் உற்பத்தி கடந்த 6 நாட்களாக முடங்கியுள்ளதால், கேன் தண்ணீருக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை பயன்படுத்தி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், பல்லாவரம், தாம்பரம், குன்றத்தூர், அனகாபுத்தூர், பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேன் குடிநீர் விற்பனையாளர்கள் சிலர், சுகாதாரமற்ற தண்ணீரை கேன்களில் அடைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என கடை மற்றும் வீடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

அதாவது தங்களிடம் உள்ள காலி கேன்களில் வீட்டு போர்வெல் தண்ணீரை பிடித்து அதில், சில ரசாயணத்தை கலந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போல் விற்பனை செய்து வருகின்றனர். இதை வாங்கி பயன்படுத்தும் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் இதனை கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கேன் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, தரமற்ற குடிநீரை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சென்னை மற்றும் புறநகர் பகுதி வீடுகளில் 60 சதவீத பயன்பாட்டிற்கு கேன் தண்ணீர் தான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, கேன் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி தரமற்ற குடிநீரில் ரசாயனம் கலந்து, கேன்களில் அடைத்து பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்துவதால், நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வெயிலிலும், திறந்த நிலையில் உள்ள வாகனங்களில், கேன் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

பல கடைக்காரர்கள், கேன் தண்ணீரை கடை முன் வெயிலில் அடுக்கி வைக்கின்றனர். இதனால், வெயிலில் பிளாஸ்டிக் உருகி தண்ணீருக்குள் கலக்கும் ‘டயாக்ஸின்’’ நச்சுப்பொருளால், கேன்சர் உட்பட பல்வேறு நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, உணவுப்பொருள்  பாதுகாப்பு அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். குடிநீர் விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள காலி கேன்களில் வீட்டு போர்வெல் தண்ணீரை பிடித்து அதில், சில ரசாயனத்தை கலந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போல் விற்பனை செய்து வருகின்றனர்.

* வெயிலில் உருகும்
மருத்துவர்கள் கூறுகையில், ‘‘பிளாஸ்டிக் கேன்களின் மீது வெயில் படும்போது, டயாக்சின் நச்சுப்பொருள் உருவாகும். இது கேன் தன்மைக்கும் தரத்திற்கும் ஏற்ப அதிகமாகவோ, குறைவாகவோ உருவாகும். இது தண்ணீரில் கலப்பதால், பொதுமக்களுக்கு கேன்சர் வரக்கூட வாய்புள்ளது. எனவே, பிளாஸ்டிக் கேன்களை வெயில்படாத இடங்களில் வைத்து பயன்படுத்த வேண்டும். நம்மிடம் அந்த கேன் வந்து சேரும் முன் பல மணி நேரம் வெயிலில் இருந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு. அது நமக்கு தெரியாமல் போகும். இதுபற்றி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Cane gangster ,
× RELATED கேன் தண்ணீர் தட்டுப்பாட்டை...