×

அறந்தாங்கி நகரில் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள்

அறந்தாங்கி,மார்ச்4: அறந்தாங்கி நகரில் பழுதடைந்து கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் ஆங்காங்கே திறந்து கிடப்பதால் விபத்து நேரும் அபாயம் உள்ளது. இதனால் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டியில் ஒரு சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து மீட்க கடுமையாக போராடியபோதிலும், உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இதனால் தமிழக அரசு பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுவதை தவிர்க்க, பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை முறையாக மணல் கொண்டு நிரப்பி மூட வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி ஒரு சில பகுதிகளில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன. இந்த நிலையில் அறந்தாங்கி நகரில் பஞ்சாத்தி சாலை, கம்மங்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகராட்சியால் அமைக்கப்பட்டு, பழுதடைந்துபோன ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளின் ஓரங்களில் உள்ள திறந்து கிடக்கும் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது:
அறந்தாங்கி நகரில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட சிறுமின்விசைத்திட்ட ஆழ்துளை கிணறுகள் பல பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளன. இதனால் அந்த ஆழ்துளை கிணறுகளுடன் இணைக்கப்பட்ட மோட்டார் குடிநீர் தொட்டி போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் அகற்றிய நிலையில் பல்வேறு பகுதிகளில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகள் திறந்த நிலையில் உள்ளன. திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.நடுகாட்டுப்பட்டி சம்பவம் இன்னும் நம் மனதை விட்டு அகலாத நிலையில், அறந்தாங்கியில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகள் மூலம் விபத்து ஏற்படும் முன்பு நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags : Aranthangi ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு