×

வத்திராயிருப்பு 4வது வார்டில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் திமுக ஒன்றிய கவுன்சிலர் வலியுறுத்தல்

வத்திராயிருப்பு, மார்ச் 4: வத்திராயிருப்பு 4வது வார்டில் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என கவுன்சிலர் வலியுறுத்தி உள்ளார். வத்திராயிருப்பு 4வது வார்டில் உள்ள கோட்டையூரில் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு மேலக்கோட்டையூர், கீழக்கோட்டையூர், தெற்கு கோட்டையூர் ஆகிய இடங்களில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி அமைத்து புதிதாக 3 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து திமுக ஒன்றிய கவுன்சிலர் கண்ணன் கூறுகையில், எனது ஒன்றிய கவுன்சிலில் கோட்டையூர், இலந்தைக்குளம், இந்திரா நகர், தைலாபுரம் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இதில் கோட்டையூரில் 6 நாட்களுக்கு ஒருமுறையும் இலந்தைக்குளம் இந்திரா நகரில் 10 நாட்களுக்கு ஒருமுறையும் தண்ணீர் கிடைத்து வருகிறது. உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

கோட்டையூரில் உள்ள ஊரணியை தூர்வார வேண்டும். ஊரணியில் தண்ணீர் இல்லாததால் கழிவு நீர் சேர்ந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் 113 பேருக்கு 3 செண்ட் வீதம் பட்டா கொடுக்கப்பட்டது. அதன் பின்பு வந்துள்ள அதிமுக அரசு 113 பேருக்கும் அவர்களுக்கான இடத்தை தேர்வு செய்து கொடுக்காததால் மக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். உடனடியாக இடங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

கோட்டையூரில் ஏ.டி.எம். மையம் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு மகாராஜபுரம், வத்திராயிருப்பு ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே வத்திராயிருப்பு ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தை கோட்டையூரில் வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கீழக்கோட்டையூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : DMK Union Councilor ,4th Ward ,
× RELATED குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு...