கம்பம், மார்ச் 4: கம்பத்தில் சலவை தொழிலாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட கருப்பசாமி கோயில் வேலிக்கற்களை அகற்றியதைக் கண்டித்து சலவைத் தொழிலாளர் சமுகத்தினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக போலீசர் இருபிரிவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கம்பம் சுருளிப்பட்டி சாலையில், தொட்டம்மன்துறையில் உள்ள கருப்பசாமி கோவில் சுற்றுச்சுவர் இடப்பிரச்சனை தொடர்பாக சலவை தொழிலாளர் சமுதாயத்தினருக்கும், அருகில் உள்ள மாசாணியம்மன் கோயிலைச் சேர்ந்தவர்களுக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் வருகிற வியாழக்கிழமை மாசாணியம்மன் கோயில் கும்பாபிசேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு கருப்பசாமி கோயிலைச்சுற்றி உள்ள வேலிகற்களை இடித்து அகற்றினர். அப்போது அங்கிருந்த சலவை தொழிலாளர் சமுதாய பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சலவை தொழிலாளர் சமுதாய மக்கள் நேற்று தொட்டம்மன்துறை கருப்பசாமி கோயில் காம்பவுண்ட் பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னக்கண்ணு, கம்பம் இன்ஸ்பெக்டர்கள் சிலைமணி, கீதா சம்பவ இடத்துக்கு வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாலையில், இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினர்.
இந்நிலையில், நேற்று தெற்கு காவல் நிலையத்தில் டிஎஸ்பி சின்னக்கண்ணு தலைமையில், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, முதற்கட்டமாக இடித்த வேலியை போட்டுக்கொடுப்பது, நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்விற்கு இருதரப்பிலும் வழக்கு பதிவு செய்வது, கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், பாதை பிரச்னை குறித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை கருப்பசாமி கோவிலைச்சுற்றி இடித்த வேலி மீண்டும் போடப்பட்டது.