×

வாக்காளர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இளைஞர்கள் ஆர்வம் பழைய படிவம் முறைக்கு ‘குட்பை’

உத்தமபாளையம், மார்ச் 4: தேனி மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பழைய முறையான படிவம் வாங்கி விண்ணப்பிக்கும் முறைக்கு குட்பை சொல்லி வருகின்றனர். தேனிமாவட்டத்தில் உத்தமபாளையம், தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி ஆகிய ஊர்களில் தேர்தல் பிரிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்கள் மூலம் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக சேர்வதற்கு படிவம் 6 வழங்கப்பட்டது. இதை பூர்த்தி செய்து, அதனுடன் வயது சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும். இதை வாங்கும் அதிகாரிகள், இது குறித்து விசாரிக்கும் களப்பணியாளர்களிடம் வழங்குவர்.
ஆனால், தற்போது அனைத்தும் கணினிமயம் ஆகும் நிலையில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இனிமேல் தேர்தல் பிரிவு அலுவலகங்களுக்கு வரவேண்டியதில்லை. ஆன்லைன் விண்ணப்பம் மூலம் உரிய ஆதாரங்களை இணைத்தால் போதுமானது. தனியார் சென்டர்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நிலை அதிகரித்து வருகிறது. தேர்தல் அதிகாரிகள் தினசரி விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து, ஊர்வாரியாக அனுப்பி வருகின்றனர்.\

இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தேர்தல் பிரிவு அலுவலகங்களில் வாக்காளர் சேர்க்கைக்கு முன்பெல்லாம் கூட்டம் அதிகமாக இருக்கும். பொதுமக்கள் நேரடியாக வந்து விண்ணப்பிப்பர். இப்போதோ நிலை மாறி விட்டது. பெரும்பாலும் இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதை விரும்புகின்றனர். இந்த விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து, களப்பணியாளர்களுக்கு வழங்குகிறோம்’ என்றனர்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?