×

பாத்திர தொழிலாளர்கள் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு

திருப்பூர், மார்ச் 4:அனுப்பர்பாளையம் பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கு 30 சதவீதம் சம்பள உயர்வு வழங்க ஏற்கனவே உடன்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு 21 சதவீதம் வழங்க உடன்பாடு ஏற்பட்டது.  திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில், 300க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இவற்றில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பாத்திர தொழிலாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது. எனவே புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு கோரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு 50 சதவிகிதம், பித்தளை, செம்பு மற்றும் வார்ப்பு அயிட்டங்களுக்கு 60 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பாத்திர உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடந்த ஜன.13ம் தேதி கடிதம் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து இரு தரப்பினரிடையே ஜன.27ம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 4 சதவீதம் மட்டுமே அதிகம் தரமுடியும் என உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. தொடர்ந்து எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடந்து வந்தது. ஒவ்வொரு கட்ட பேச்சுவார்த்தையின்போதும் இரு தரப்பிலும் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வந்தது.  இந்நிலையில் கடந்த வாரம் நடந்த பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கான 5ம் கட்ட பேச்சுவார்த்தையில் உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில் பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கு 30 சதவீதம் வழங்குவதாக தெரிவித்தனர். இந்த சம்பள உயர்வை தொழிற்சங்கத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து பித்தளை பாத்திர தொழிலாளர்களுக்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்தது. கடைசியாக கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையின்போது, உற்பத்தியாளர்கள் தரப்பில், 17 சதவீதம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தொழிற்சங்கத்தினர் ஒப்புக்கொள்ளாததையடுத்து, நேற்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை பாத்திர உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் நடந்தது.

இதில் உற்பத்தியாளர் தரப்பில், ஏற்கனவே வழங்குவதாக அறிவித்த 17 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் உயர்த்தி 21 சதவீதம் தருவதாக தெரிவித்தனர். இதை தொழிற்சங்கத்தினரும் ஏற்றுக்கொண்டதையடுத்து, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.  கடந்த காலங்களில் சம்பள உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை பல மாதங்கள் இழுபறியாக இருந்து வந்த நிலையில், தற்போது ஒரே மாதத்தில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தொழிலாளர் துறை துணை ஆணையர் முன்னிலையில், பாத்திர தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags : Role workers ,
× RELATED எவர்சில்வர் பாத்திர...