×

கேங்மேன் பணி தேர்வை நிறுத்த வேண்டும் தொ.மு.ச தமிழக கவர்னருக்கு கடிதம்

திருப்பூர், மார்ச் 4:நீதிமன்ற தடையை மீறி மின்வாரிய கேங்மேன் பணிக்கு தேர்வு நடத்துவதை நிறுத்த வேண்டும் என தமிழக கவர்னருக்கு தொ.மு.ச சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் சரவணன் தமிழக கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மின் வாரியத்தில் கேங்மேன் பதவி தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, மின்வாரியம் கேங்மேன் பதவிக்கு மார்ச் 15ல் எழுத்து தேர்வு நடத்த உள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். மேலும், தமிழக மின் வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யாமல், இந்த ஆண்டு கேங்மேன் பணிக்கு 5,000 பதவியை உருவாக்கியதை எதிர்த்து திருப்பூர் மாவட்ட தொ.மு.ச சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

பின்னர் கேங்மேன் பதவிக்கு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு மின் வாரிய முயற்சிக்கு தடைவிதிக்கப்பட்டது. மேலும் கேங்மேன் பணி நியமனம் தொடர்பாக எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் நீதிமன்ற உத்தரவை மீறி தேர்வுகள்  நடத்த மின்வாரிய தலைமை பொறியாளர் பணியமைப்பு மார்ச் 15ல் எழுத்து தேர்வு நடத்தப்படும் என கடந்த மார்ச் 2ம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளது.  எனவே நீதிமன்ற உத்தரவை மீறி கேங்மேன் பதவி தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் மின்வாரியம் உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் கேங்மேன் பதவியை ரத்து செய்து, தமிழகம் முழுவதும் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய  வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : governor ,Tamil Nadu ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...