×

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் விடுபட்ட ஊர்களை இணைக்கனும் பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை, மார்ச். 4: சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் விடுபட்ட ஊர்களை இணைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மெயின் பைப் லைன் திருப்புத்தூர், கல்லல், காளையார்கோவில், மறவமங்கலம், இளையான்குடி வழியாக ராமநாதபுரம் செல்கிறது. இதேபோல் காளையார்கோவிலிலிருந்து கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை வழியே பைப்லைன் அமைக்கப்பட்டு சிவகங்கைக்கு காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த திட்டத்தில் முதற்கட்டமாக கிராமங்கள் சேர்க்கப்பட்டபோது குடிநீர் பிரச்னை உள்ள பல ஊர்கள் இணைக்கப்படவில்லை.

மெயின் பைப்லைன் செல்லும் வழியில் உள்ள ஊர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படவில்லை. இதுபோல் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்னையுள்ள ஏராளமான கிராமங்கள் விடுபட்டுள்ளன. குடிநீர் பிரச்னையால் பாதிக்கப்படும் அனைத்து ஊர்கள் மற்றும் அனைத்து ஊராட்சிகளையும் இத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ‘சிவகங்கை மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. நகராட்சிகள் மற்றும் சில கிராமங்களை தவிர மற்ற கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்கள் இல்லை. காவிரி குடிநீர் திட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பெரும்பாலான ஊர்கள் வழியே காவிரி குடிநீர் திட்ட பைப்லைன்கள் செல்கிறது. மேலும் ஏற்கனவே உள்ளூர் குடிநீர் திட்டங்களுக்காக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளும் இருக்கிறது. இத்திட்டத்தில் அவ்வூர்களை இணைக்க புதிய பைப்லைன்கள் மற்றும் தொட்டிகள் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் பெரிய அளவில் செலவுகள் இல்லை. எனவே மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி விடுபட்ட ஊர்களை இத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : towns ,
× RELATED ஓடை உடைப்புகளை சரி செய்ய கோரிக்கை