×

ஊட்டி மீன்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஊட்டி, மார்ச். 4: ஊட்டி மார்க்கெட்டில் 5க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இதேபோல் மெயின் பஜார் சாலை மற்றும் பஸ் நிலையம் அருகே மீன்வளத்துறைக்கு சொந்தமான மீன் விற்பனையகம் உள்ளது. இந்நிலையில் மீன்கள் கெட்டு போகாமல் இருக்க பார்மலின் எனப்படும் ரசாயனம் மருந்து கலந்து மீன்கள் பதப்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் கவுசல்யா தேவி தலைமையில் நேற்று ஊட்டி நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் சில கடைகளில் தரமற்ற மற்றும் நீண்ட நாட்களான பழைய கெட்டு போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சுமார் 80 கிலோ கெட்டு போன மீன்களை பறிமுதல் செய்து அதில் பினாயில் ஊற்றி அழித்தனர்.

மேலும் பஸ் நிலைய பகுதியில் உள்ள மீன்வளத்துறைக்கு சொந்தமான மீன் விற்பனையகத்திலும் ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு தரமான மீன்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கடைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என மீன் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுேபான்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் கவுசல்யா தேவி கூறுகையில், ‘‘பொதுமக்களுக்கு தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இதில் சில கடைகளில் தரம் குறைந்த மற்றும் கெட்டு போன மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நல்ல தரமான மீன்களை மட்டுமே விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மீன்களை கண்டிப்பாக ஐஸ் கட்டிகளில் வைத்து தான் விற்க வேண்டும். கடைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்மலின் மருந்து பயன்படுத்தி மீன்கள் பதப்படுத்தப்படுகிறதா என ஆய்வு நடத்தப்பட உள்ளது,’’ என்றார். இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சிவராஜ், சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : inspection ,Ooty Fisheries ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...