×

மாற்றுச் சான்றிதழ் கேட்டு பள்ளியில் குவிந்த பெற்றோர்

கூடலூர், மார்ச் 4:  கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 290 மாணவர்கள்  பயின்று வருகின்றனர். தேவாலா, அட்டி, பொன்வயல், வாளவயல், சோழவயல், கயிதகொல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்ததால் பள்ளியின் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஏற்கனவே இருந்த தலைமை ஆசிரியர் பணியிட இடமாற்றத்தில் சென்றதால் புதிய தலைமை ஆசிரியர்  நியமிக்கப்பட்டார். தற்போது இப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மீது  பாலியல் புகார்  வருவதால் தங்களது குழந்தைகளின் பள்ளி மாற்றுச் சான்றிதழை வழங்கக்கோரி பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் குவிந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தேவாலா காவல்துறையினர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித் துறை அலுவலர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘‘ புதிய தலைமை ஆசிரியர் பதவியேற்றது முதல் பள்ளியில் பல்வேறு பிரச்னைகள் உருவாகி வருகின்றன. விதிமுறைக்கு மாறாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தில்  முதன்மை செயலாளர்  என்ற பதவியை உருவாக்கி தனக்கு வேண்டிய ஒருவரை நியமித்துள்ளார். தங்களது செயல்களுக்கு ஒத்து வராத ஆசிரியர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.  இதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மீது மாணவிகளை மிரட்டி பாலியல் புகார் அளிக்க வைத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பள்ளியின் நிர்வாகம் தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் வெளி நபர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. வெளிநபர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்து மாணவர்களை மிரட்டி தேவையற்ற செயல்களில் ஈடுபட செய்ய வதால் ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே இருந்த நல்லுறவு குலைந்துபோய் மாணவர்களின் படிப்பு பாழாகி வருகின்றது.

ஆரம்பத்தில் பள்ளிக்கு இருந்த நற்பெயர் காரணமாக எங்களது பிள்ளைகளை இங்கு சேர்த்தோம். இப்போது உள்ள சூழல் எங்களது குழந்தைகளின் கல்வித்தரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே எங்களது குழந்தைகளின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரியும் இங்கு வந்துள்ளோம். காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து எங்களது குழந்தைகளின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளிகளில் சேர்க்க உள்ளோம்,’’  என்றனர். பிரச்னை தொடர்பாக தகவல் இருந்த கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி நேற்று பள்ளியில் ஆய்வு செய்தார். மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்காத வகையில் ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் நடந்து கொள்ளாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags : parents ,school ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி