×

சூலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேட்ஜ் வழங்குவதில் காலதாமதம்

கோவை, மார்ச் 4:  கோவை சூலூர் பகுதி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேட்ஜ் வழங்குவதில் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சூலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுப்பணிவில்லை (பேட்ஜ்) தொடர்பான பணிகள், புதிய மற்றும் பழைய அனுமதியில்லாத சரக்கு வாகனங்களுக்கு (என்சிபி) வரி மேற்குறிப்பு செய்தல், வரி பாக்கியில்லா சான்றுகள் வழங்குவதில் பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இணை போக்குவரத்து ஆணையர் நிர்வாக நலன் கருதி சூலூர் பகுதி அலுவலகத்தில் பெறப்பட்டு வந்த பொதுப்பணிவில்லை(பேட்ஜ்) தொடர்பான மனுக்கள் அலுவலக வேலைநாட்களில் கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெறப்படும் எனவும், உரிய சான்றுகளுடன் ஆர்.டி.ஓ.வை நேரில் சந்தித்து மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், மோட்டர் வாகன ஆய்வாளர் நிலை-1 சம்மந்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வரும் மனுதார்களை உரிய விவரங்களை தெரிவித்து பேட்ஜ்க்கு கோவை தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பொதுப்பணிவில்லை வழங்குதல் தொடர்பான பணிகளில் ஆர்.டி.ஓ. அலுவலரின் ஒப்புதல் பெற்றுதான் வழங்க வேண்டும். போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்குதல், சரண் ஏற்றல், வரி மேற்குறிப்பு செய்தல், வரி பாக்கியில்லா சான்று வழங்குதல் ஆகிய அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் மேற்கொள்ள வேண்டும்.

டிராக்டர், டிரெய்லர் வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்தல் போன்ற நவடிக்கையும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்தான் பெற வேண்டும். மறுபதிவு தொடர்பான பணிகளுக்கு ஆர்.டி.ஓ. உத்தரவு பெற்ற பின்னரே பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் இணை ஆணையர் உத்தரவினை மீறி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர், பேட்ஜ் போட வரும் மற்றும் என்சிபி பணிக்களுக்கான மனுக்களை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அளிப்பது இல்லை எனவும், தனிச்சையாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், சூலூர் மோட்டார் ஆய்வாளர் பல மாதங்களுக்கு முன்பே உசிலம்பட்டிக்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையிலும், தொடர்ந்து சூலூரில் பணியாற்றி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை தெற்கு ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.

Tags : Sulur R.T.O. ,
× RELATED சூலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேட்ஜ் வழங்குவதில் காலதாமதம்