×

அரசு கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல் மூடைகள் விவசாயிகள் வேதனை

உசிலம்பட்டி, மார்ச் 4: உசிலம்பட்டி தாலுகா, செல்லம்பட்டி ஒன்றியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் 3 இடங்களில் அமைத்துள்ளது. முண்டுவேலம்பட்டி, செல்லம்பட்டி, சங்கம்பட்டி ஆகிய பகுதிகளில் கொள்முதல் நிலையம் உள்ளது. விவசாயிகள் நெல் அறுவடை செய்து முண்டுவேலம்பட்டியில் கடந்த 16 தினங்களாக விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.நெல்கொள்முதல் செய்யும் அதிகாரிகளுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும், பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை நெல்லை வாங்க வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் அளவில் மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதே நெல் கொள்முதல் மையங்களுக்கு அருகில் தனியார் வியாபாரிகள் கிலோ ரூ.50க்கு விலைக்கு வாங்கி லாரிகளில் ஏற்றி இதே அரசு நெல்கொள்முதல் மையங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இந்த செயலில் ஆளும் கட்சியினரும், இதற்கு உடந்தையாக அதிகாரிகளும் இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் குருசாமி கூறுகையில், ‘இப்பகுதியில் நெல் அறுவடை செய்து 16 தினங்களாக நெல் சிந்தி, சிதறிக்கிடக்கிறது. நெல் மூடைகளை வைக்க இடமில்லாமல் இப்பகுதியிலுள்ள கோவில், நாடகமேடை, களம் மற்றும் சாலையோரங்கள் என ஆங்காங்கே நெல்லை குவித்து வைத்து விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் மழை பெய்தால் இப்பகுதி விவசாயிகளின் ஒட்டு மொத்த உழைப்பும் வீணாகி விடும். விவசாயிகளை தொடர்ந்து இந்த அரசு வஞ்சித்து வருகிறது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத நிலையில் இப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து செல்லம்பட்டி பஸ் நிறுத்தம் மதுரை-தேனி சாலையில் மறியலில் ஈடுபடுவோம்’ என்றார்.இதேபோல் காசிநாதன் கூறுகையில், ‘இப்பகுதியிலுள்ள விவசாயிகள் அனைவருமே வைகைப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். கண்மாய் இல்லாததால் நேரடி பாசனம் மூலம் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்மணிகள் இப்படி கிடக்கிறது. அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என்பதுதான் வேதனையளிக்கிறது’ என்றார்.

இதேபோல் பஞ்சம்மாள் கூறும்போது, ‘இப்பகுதியிலுள்ள கண்மாய்களில் மீன் குத்தகைக்கு விடாததால், தற்போது நேரடியாக வைகைப் பாசனம் மூலம் குருவி சேர்த்தார் போல் இந்த நெல் அறுவடை செய்து வைத்திருக்கிறோம். நெல் கொள்முதல் செய்யாததால் வெட்ட வெளியில் நெல்லை கொட்டி வைத்துள்ளோம். அதிக நாட்கள் கொட்டி வைத்துள்ளதால் நெல் விளைவித்த பகுதியில் எலிகள் ஊடுருவி விடுமோ, மழை பெய்து அனைத்து நெல்லும் வீணாகி விடுமோ என தினமும் கொட்டி வைக்கப்பட்ட நெல்களை கூட்டி குவித்து வைத்து வருகிறோம். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதே நிலை தொடர்ந்து நடைபெற்றால் இப்பகுதியிலுள்ள விவசாயிகள் அனைவரும் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

Tags : government procurement centers ,
× RELATED விவசாயிகளை அடியோடு அழிக்க அரசுகள்...