×

பழநியில் டெல்லி தாக்குதல் கண்டித்து தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

பழநி, மார்ச் 4: டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பழநியில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் தீவிர போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். குடிமக்களின் தேசிய பதிவை ரத்து செய்ய வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவை ஏற்கமாட்டோமென வலியுறுத்தி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

கேரளா, ராஜஸ்தான், புதுவை மாநிலங்களில் மத்திய அரசின் இச்சட்டங்களுக்கு எதிராக சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றியது போல், தமிழகத்திலும் இச்சட்டங்களை அமல்படுத்த மாட்டோமென தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தர்ணா, மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கண்டித்தும், அதற்கு துணை நின்ற காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று பழநி மயில் ரவுண்டானா முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாரூக் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர தலைவர் மூசா, நகரசெயலாளர் சேக் தாவூத்உலி, பொருளாளர் முகமது இப்ராஹிம், மாவட்ட துணணச் செயலாளர் சையது சாந்து முகமது, முன்னாள் நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil ,protesters ,attack ,Delhi ,Palani ,
× RELATED வட இந்தியாவை அச்சுறுத்தும்...