×

அய்யம்பாளையம் ஏகேஜி நகரில் மாறாத மண் சாலையால் மக்கள் கடும் அவதி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

பட்டிவீரன்பட்டி, மார்ச் 4: அய்யம்பாளையம் ஏகேஜி நகரில் மண் சாலையே நீடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணையின் மேற்புறத்தில் உள்ளது ஏகேஜி நகர். இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இதுவரை தார் சாலையை பார்த்ததே இல்லை.மருதாநதி கரை ஓரமாக உள்ள மண்சாலை மற்றும் கற்கள் நிறைந்த சாலையை கடந்துதான் சென்று வருகின்றனர்.

இங்கு அரசு பஸ் வசதி கிடையாது. டூவீலர் அல்லது ஆட்டோவில்தான் பயணம் மேற்கொள்கின்றனர். இப்பகுதியில் தென்னை, மா விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. இந்த சாலை வழியாகத்தான் விளைபொருட்களை விற்பனைக்காக டிராக்டர் மூலம் கொண்டு வருகின்றனர். சேதமான சாலையாக இருப்பதால் டீசல் அதிகளவில் செலவாகுவதாக கூறி விளைபொருட்களை ஏற்றி செல்ல அதிக வாடகை கேட்கின்றனர்.

இவ்வூரிலிருந்து தினமும் மருதாநதி அணை அரசு ஆரம்ப பள்ளிக்கு 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த கரடுமுரடான சாலையில்தான் நடந்து சென்று வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் நோயாளிகளை மருத்துவமனைக்கு மிகுந்த சிரமப்பட்டுத்தான் அய்யம்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவலம் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஏகேஜி நகருக்கு இதுவரை சாலை வசதி ஏற்படுத்தி தரவே இல்லை. மண் சாலையைத்தான் காலம்காலமாக பயன்படுத்தி வருகிறோம். மழை பெய்யும் காலங்களில் சாலை இன்னும் மோசமாகி விடும். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறினோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதி மக்கள், விவசாயிகள் நலன் கருதி தார்ச்சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : district administration ,Ayyampalayam ,city ,AKG ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை