×

கோபி தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் தவிப்பு

ஈரோடு, மார்ச் 4: கோபி தாலுகா அலுவலக வளாகத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோபி தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், வட்ட வழங்கல் பிரிவு, இ சேவை மையம், கலால் பிரிவு, வாக்காளர் அடையாள அட்டை பிரிவு என ஏராளமான அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது.  குறிப்பாக, குடிநீர் வசதி என்பது வளாகத்தில் அறவே இல்லை. ஊழியர்களின் பயன்பாட்டிற்காக மட்டும் அலுவலகத்திற்குள் தனியாக ஆர்ஓ பிளாண்ட் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு குடிப்பதற்கு எந்த இடத்திலும் தண்ணீர் இல்லை. இதேபோல், கழிப்பறைகள் இருந்தும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

அலுவலக வளாகத்தின் பின்புறம் ஆண், பெண் என தனித்தனியாக 2 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால் கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்தவே முடியாத நிலை இருந்து வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் பொதுமக்களின் வசதிக்காக அலுவலக வளாகத்தில் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ள நிலையில், கழிப்பறைகளையும் தூய்மையாக பராமரிக்க வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags : office ,Gopi Taluk ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...