×

கோபி பஸ் ஸ்டாண்டில் திருநங்கைகள் கழிப்பறைக்கு பூட்டு

ஈரோடு, மார்ச் 4: கோபி பஸ் ஸ்டாண்டில் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறைக்கு பூட்டு போடப்பட்டுள்ளதால் திறந்த வெளி பகுதிகளை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
கோபி பஸ் ஸ்டாண்டில் நகராட்சி கட்டண கழிப்பறை செயல்பட்டு வருகிறது. இதில், ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் கழிப்பறைகள் உள்ளன. இதுதவிர, திருநங்கைகளுக்கு என்று அதே வளாகத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், திருநங்கைகளுக்கான கழிப்பிடத்தினை ஏலதாரர்கள் பூட்டிவிட்டதால் திருநங்கைகள் வேறுவழியின்றி திறந்த வெளிப்பகுதிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருநங்கைகள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருநங்கைகளுக்கு என்று தனியாக கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த நிலையில் கோபி நகராட்சி நிர்வாகம் எங்களது கோரிக்கையை ஏற்று தனி கழிப்பறை கட்டிக்கொடுத்தது. ஆனால், கழிப்பறை ஏலம் எடுத்த ஏலதாரர்கள் கழிப்பிடத்திற்கு பூட்டு போட்டு விட்டனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்கள் அல்லது பெண்கள் கழிப்பறைகளுக்கு சென்றால் தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது.எனவே, வேறுவழியின்றி திறந்தவெளிகளை தான் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே, நகராட்சி நிர்வாகம் பூட்டப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : bus stand ,Kobe ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை