×

(தி.மலை) காடுகள் தீப்பற்றினால் வெப்பநிலை அதிகரிக்கும் வனச்சரகர் தகவல் ஜம்னாமரத்தூரில் விழிப்புணர்வு கூட்டம்

போளூர், மார்ச் 4: காடுகள் தீப்பற்றினால் வெப்பநிலை அதிகரிக்கும் என ஜம்னாமரத்தூரில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வனச்சரகர் தெரிவித்தார். ஜம்னாமரத்துர் அடுத்த கோமுட்டேரி கிராமத்தில் வனத்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு வன தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வனக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வனச்சரக அலுவலர் குணசேகரன் பேசியதாவது: ‘காடுகள் மற்றும் மலைகள் இயற்கை நமக்கு தந்த சொத்துக்கள். இயற்கை வளங்கள் அனைத்தையும் நமது சொத்துக்களாக கருத வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் எத்தனையோ மலைகள் இருந்தாலும் ஜவ்வாதுமலையில் மட்டும்தான் அடர்ந்த காடுகள் உள்ளது. எனவே இதனை பாதுகாப்பது நமது கடமை. காடுகளை வனத்துறையினர் மட்டுமே பாதுகாத்து விட முடியாது. மக்களின் பங்களிப்பு இருந்தால்தான் முழுமையாக பாதுகாக்க முடியும். காடுகளில் தீப்பற்றிக்கொண்டால் அதனை அணைப்பதற்கு வனத்துறையினருடன் மலைவாழ் மக்களும் சேர்ந்து முன்வர வேண்டும். மேலும், காடுகள் தீப்பற்றினால் வெப்பநிலை அதிகரிக்கும், மழை குறையும், தேனீக்கள் அழியும். இதனால், தேன் உற்பத்தி பாதிக்கும். காட்டில் உள்ள அனைத்து வன மகசூல் பொருட்களும் மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும். இதனால், மலைவாழ் மக்களின் பொருளாதாரம் பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு காடுகளில் தீ வைக்காமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், வனவர்கள் கிருஷ்ணமூர்த்தி, கணேஷ், பாண்டுரங்கன் மற்றும் வன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Forest fires ,
× RELATED கேத்தி மலை பகுதியில் காட்டு தீ புற்கள், செடிகள் எரிந்து சாம்பல்