×

டிஜிபி அலுவலகத்தில் பாஜக திடீர் போராட்டம்

புதுச்சேரி, மார்ச் 4:  காரைக்கால்  என்ஐடியில் கடந்த 28ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய  போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். பின்னர் அன்று  மாலை புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு  பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், புதுச்சேரி பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட சிலரை உள்ளே  செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் அவரை தடுத்து நிறுத்தி தள்ளிவிட்டதாக  கூறப்படுகிறது. இதனை கண்டித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி பாலாஜி வத்சவாவை சந்திக்க பாஜகவினர்  நேரம் கேட்டிருந்தனர். அதன்படி நேற்று காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு  வருமாறு தெரிவிக்கப்பட்டது.

கட்சியின் பொதுசெயலாளர் தங்க விக்ரமன் தலைமையில் பாஜக  நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர்  டிஜிபி அலுவலகத்துக்கு  சென்றனர்.  அதுசமயம் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள  டிஜிபி சென்றுவிட்டார். இதனால் வெகு நேரம் காத்திருந்து அதிருப்தியடைந்த  பாஜகவினர் திடீரென காவல்துறை அலுவலக நுழைவு வாயில் முன் அமர்ந்து தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்த போலீசார் அலுவலக கேட்டை  இழுத்து பூட்டினர்.  அங்கிருந்த சிறப்பு பிரிவு எஸ்பி  மோகன்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து  போராட்டத்தை கைவிட்டு பாஜக நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதனால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : BJP ,outbreak ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...