×

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் அவலம் அங்கன்வாடி மையங்களில் முட்டை, தானியங்கள் விற்பனை

நெய்வேலி, மார்ச் 4: குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முட்டை, தானியங்கள் விற்பனை செய்வதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பல ஊழல்கள் நடந்து வருகிறது. இவற்றால் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறாமல் உள்ளது. மேலும், தரமான சாலைகள், கட்டிடங்கள் போன்றவை மக்களுக்கு கிடைப்பதில்லை. இவற்றில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, மாணவர்களின் நலனுக்காக அரசு வழங்கி வரும் சாப்பாடு, முட்டை, ஊட்டச்சத்து மாவு போன்றவற்றிலும் ஊழல் நடந்து வருவது வேதனையாக உள்ளது. அந்தந்த துறைக்கு என ஒதுக்கப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, ஊழல், முறைகேடுகளை தடுக்க முன் வரவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், சமையல்காரர் மற்றும் உதவியாளர்கள் பணி இடங்கள் அனைத்தும் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நியமிக்கப்படுகிறது. இதில் அங்கன்வாடி மையங்களில் முட்டை, கலவை சாதத்துடன் கொண்டைக்கடலை, பாசிப்பயிறு, உருளைக்கிழங்கு உள்ளிட்டவை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஆனால் குறிஞ்சிப்பாடி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்யாத காரணத்தால் பல அங்கன்வாடி மையங்களில் பெயரளவுக்கு மட்டுமே சமைத்து விட்டு ஊழியர்கள் சென்று விடுகின்றனர். மேலும் சமீபகாலமாக குறிஞ்சிப்பாடி பகுதியில் அரசு முத்திரை வைக்கப்பட்டுள்ள சத்துணவு முட்டைகளை வெளிச்சந்தைகளிலும், சில்லரை விற்பனை கடைகளிலும் தாராளமாக கிடைப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

சத்துணவு மையங்களுக்கு வாங்கப்படும் முட்டைகள் எப்படி கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது என்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து மாவு பாக்கெட்டை சத்துணவு மையங்கள் அருகே உள்ள கால்நடைகள் வைத்திருக்கும் கிராம மக்களிடம் மாவு மூட்டை ரூ. 200க்கு விற்பனை செய்கின்றனர். பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் முட்டைகள், பருப்பு வகைகள் விற்பனை செய்வது, இது போன்று சட்டவிரோதமான ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் முட்டைகள், தானிய பயிறுகளை வெளிச் சந்தையில் விற்பனையில் ஈடுபடும் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : centers ,Anganwadi ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!