×

பட்டா இங்கே.. மனை எங்கே? கடலூர் ஆட்சியரிடம் தொழிலாளர்கள் புகார்

கடலூர், மார்ச் 4:    கடலூர் மாவட்டத்தில் ஏழை எளியோருக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டும் அதற்கான இடம் எங்கே என்ற கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அமைச்சர் சம்பத், ஆட்சியர் அன்புச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கடந்த மாதம் 6ம் தேதி வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா தொடர்பான இடம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல்வேறு தொழிலாளர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா கிடைத்தும் இடமில்லை என்ற நிலைப்பாடு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதுவும் மாவட்ட அமைச்சர், ஆட்சியர் ஆகியோர் கரங்களால் விழா மூலம் வழங்கப்பட்ட பட்டாவின் நிலை சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நல சங்கம் மாவட்ட செயலாளர் முனுசாமி கூறுகையில்: கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் மாவட்டி பாளையத்தில் சலவை தொழிலாளர்கள், சிக்கு முடி தொழிலாளர்கள் என பல்வேறு தொழிலாளர் பிரிவினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான இடத்தை கேட்டால் வருவாய்த்துறையினர் காலம் கடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பட்டா தொடர்புடைய இடத்தை அளவீடு செய்ய வேண்டும் என கூறினால் அதற்கான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நலத்திட்ட மூலம் கிடைக்கப்பெற்ற இலவச மனைப்பட்டா பயனற்ற நிலையை உண்டாக்கி உள்ளது. இது குறித்து பல்வேறு முறை முறையிட்டும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை கிடப்பில் போட்டு உள்ளனர் என்றார்.

இந்நிலையில் கடலூரில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து பாதிக்கப்பட்ட சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர் தரப்பினர் கொடுக்கப்பட்ட மனைப்பட்டா தொடர்பான இடத்தை  காணோம் என்ற அடிப்படையில் புகார் மனு வழங்கினர். இதுகுறித்து வழங்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த 53 பேருக்கு தொழில்துறை அமைச்சர் சம்பத் கடந்த பிப்ரவரி 6ம் தேதி மாவடி பாளையத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கினார். இதில் பெரும்பான்மையோர் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். பட்டா கொடுத்த இடத்தை அளப்பதற்காக வங்கியில் பணம் கட்டி ரசீதை பதிவு தபால் மூலமாகவும், நேரடியாகவும் கொடுத்துள்ளோம்.

பலமுறை தாசில்தார் அலுவலகம் சார்பில் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. சர்வே பிரிவில் இடத்தை சமப்படுத்தி கொடுக்காமல் எப்படி அளப்பது என்று கேள்வி கேட்கின்றனர். கொடுக்கப்பட்டுள்ள வீட்டுமனை ஒப்படைப்பு சான்றிதழில் நிபந்தனைப்படி பிரதான வீட்டுமனை இடத்தின் மேல் ஒரு வீடு கட்டவேண்டும். அது ஓலையினால் அல்லது ஒட்னாலோ இருக்க வேண்டும். வீட்டுமனை ஒப்படைத்து ஆறு மாதங்களுக்குள் கட்ட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மாவடி பாளையத்தில் இந்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை இதுவரை காட்டப்படவில்லை. அதே இடத்தில் இலவச வீட்டுமனை பெற்ற சவுரிமுடி தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள இருபதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் இதே நிலைதான் உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இடத்தை அளவீடு செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : land ,Cuddalore ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...