×

குமரி மலையோர பகுதிகளில் திடீர் மழை

நாகர்கோவில், மார்ச் 4: குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை இல்லை. கடைவரம்பு பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்ததுடன் அணை மூடப்படும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதனை ஏற்று மேலும் 10 நாட்களுக்கு கால்வாய்களில் தண்ணீர் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்தது. அந்த வகையில் அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று காலை முதல் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் இருள் சூழ்ந்திருந்த நிலையில் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக உலக்கை அருவி, பெருந்தலைக்காடு, அழகியபாண்டியபுரம், தெரிசனங்கோப்பு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 28.90 அடியாக இருந்தது. அணைக்கு 441 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 604 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 41.65 அடியாக இருந்தது.

அணைக்கு 63 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் 150 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 9.21 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. 152 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 200 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார்-2ல் நீர்மட்டம் 9.32 அடியாக உள்ளது. பொய்கையில் 19.80 அடியாக நீர்மட்டம் காணப்பட்ட நிலையில் வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை போன்று மாம்பழத்துறையாறு அணையில் 43.80 அடியாக நீர்மட்டம் காணப்பட்ட நிலையில் வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 15.1 அடியாகும். அணையில் இருந்து வினாடிக்கு 7.42 கன அடி தண்ணீர் குடிநீருக்காக சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Kumari ,hills ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...