×

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ கண்டனம்

நாகர்கோவில், மார்ச் 4: குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தின் வாயிலாக சில இடங்களில் ஆற்றி வருகின்ற கருத்துரை குமரி மாவட்ட மக்கள் உள்ளத்தை வேதனைப்படுத்தியுள்ளது. நம் மாவட்டத்தில் பல்வேறு மதம், இனம், மொழி, சார்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் நம்முடைய ஒற்றுமையை, சகோதரத்துவத்தை பாதுகாத்து வருகிறோம் என்பதில் நமது மாவட்ட மக்களுக்கு பெருமை உண்டு. குமரியில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து குமரி வாழ் மக்களின் வாக்குகளை பெற்று அமைச்சராக இருந்து வந்த நீங்கள் இத்தகையை கருத்துகளை வெளியிட்டு அமைதி பூங்காவான நம் மாவட்டத்தை ஒரு  கலவர மாவட்டமாக மாற்ற நினைப்பது என்ன நியாயம்.

குமரி மாவட்ட மக்களின் எண்ணங்களில் மதம் எதுவாக இருந்தாலும் மனித நேயமும், ஒற்றுமையும்தான் முக்கியமென்று வாழ்கின்றனர். பல்வேறு இடங்களில் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் காவல்துறையின் ஒற்றர்கள் மூலமாக அரசியல் ரீதியான செய்திகள் அதிகரித்து வருகின்றன. மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு  கலவரத்தை உண்டாக்கிவிட வேண்டும் என்ற நோக்கோடு சமீபத்தில் நடைபெற்ற சில பொதுக்கூட்டங்களிலும் நீங்கள் பேசி ஊடகங்களில் அது வைரலாக பரவியிருக்கிறது என்பது நீங்கள் அறிந்திருக்க கூடும். உங்கள் கொள்கையில் வெற்றியடைவது ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உண்டு. உங்கள் அகில இந்திய பாஜ தலைவர்கள் போன்று வெறித்தனம் கொண்டு ஆணவம் கலந்த கருத்துகளை வெளியிட்டு வருகிறீர்கள்.

ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பியாக, இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதை பார்க்கிறோம். அப்படி வாழ்ந்து வருகின்றவர்கள் மத்தியில் ஒரு மத்திய அமைச்சராக இருந்தவர் ஒரு  கலவரத்தை உருவாக்க நினைக்கின்ற உங்கள் செயலுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக வன்மையான கண்டிப்பதோடு இது போன்று தூண்டுகின்ற செயல்களில் ஈடுபடுகின்றவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தையும், காவல்துறையையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sureshrajan MLA ,
× RELATED டவுன் ரயில்வே நகர் பகுதியில் 3.50...