×

குமரியில் 3 கேன் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல் வைப்பு

நாகர்கோவில், மார்ச் 4: ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்து வந்த 3 கேன் வாட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகள் தொடர்பாக ஆய்வு நடத்தி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து  குடிநீர் வடிகால் வாரியத்தின் நிலத்தடி நீர்பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் நெல்லையில் இருந்து வந்த அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் ஆலைகளில் ஆய்வு நடத்தினர்.

அரசு வகுத்திருக்கும் வரைமுறைகளின்படி, நிலத்தடி நீர் எடுக்கப்படும் இடங்கள் என்பது அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி, பாதி அபாயகரமான பகுதி, சராசரியான பகுதி என 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதிகளில் குடிநீர் உறிஞ்சி எடுக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதர 2 பகுதிகளில் குடிநீர் ஆலைகள் அமைக்கலாம். அந்த பகுதிகளில் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எனவே கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு அரசு உரிமம் வழங்குவது இல்லை என்ற தகவலில் உண்மை இல்லை. அனுமதி இல்லாத குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு  ஐகோர்ட் உத்தரவின்பேரில் சீல் வைக்கப்படும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் 49 ஆலைகள் செயல்பட்டு வந்த நிலையில் இதில் 43 ஆலைகள் உரிய ஆவணங்களை வைத்திருந்தனர். உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 3 நிறுவனங்கள் உரிமம் தொடர்பாக விண்ணப்பிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலனையில்  இருந்து வருகிறது. 3 நிறுவனங்கள் மட்டும் எந்தவித உரிமமும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கியது தெரியவந்தது. நாகர்கோவில் அருகே செயல்பட்டு வந்த இந்த மூன்று நிறுவனங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

நிலத்தடி நீர் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்திய தர கட்டுப்பாட்டு அமைப்பு, உணவு பாதுகாப்பு துறை ஆகியவற்றிடம் உரிய முறையில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் இயங்குகின்ற நிறுவனங்களின் மீது இந்த அரசு துறைகள் சார்பில் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளலாம். உணவு பாதுகாப்பு துறை சார்பில் அவ்வப்போது சோதனைகள் நடத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மூன்று நிறுவனங்கள் மீது சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிற நிறுவனங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Cane Water Companies ,Kumari ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...