×

அய்யா வைகுண்டர் அவதார தின விழா

நெல்லை, மார்ச் 4:  நெல்லை, பாளை, பேட்டை என மாநகரின் பல்வேறு பகுதிகளில் அய்யா வைகுண்டர் அவதார தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர். நெல்லை மாநகரில் அய்யா வைகுண்டரின் 188வது அவதார தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பாளை வடபகுதியில் உள்ள அகில பதியில் இருந்து நாராயண ஜோதி ஊர்வலம் நடந்தது. இதில் பங்கேற்ற அய்யா வழி தொண்டர்கள், அய்யா வழி பாடல்களை பாடியபடியே சென்றனர். இவர்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பாளை பகுதி செயலாளர் சின்னத்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பாளை பகுதி பொருளாளர் சண்முகம், துணை செயலாளர்கள் மாசானமுத்து, சங்கர் மற்றும் செல்வராஜன், ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெல்லை டவுன் நாராயணசாமி கோயிலில் அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி கடந்த 2ம் தேதி காலை திருப்பள்ளி எழுச்சி, உகப்படிப்பு, பால் அன்னதர்மம் நடந்தது. மதியம் ஏக மகா அன்னதர்மம் நடந்தது. மாலை 5 மணிக்கு அனுமன் வாகனத்தில் அய்யா ரத வீதியுலா  நடந்தது. இதையடுத்து அய்யாவின் அவதார தினத்தையொட்டி பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. இதில்அய்யா பதி பண்டாரங்கள் மற்றும் பணிவிடையாளர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

பேட்டை: இதே போல் பழைய பேட்டை நாராயண சுவாமி கோயிலில் அய்யா வைகுண்டரின் 188வது அவதார தினத்தையொட்டி அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. பழைய பேட்டை நாராயண சுவாமி கோயில் தெருவில் உள்ள சேர்மன் அருணாசல சுவாமி அருள்பதியில் அய்யா வைகுண்டரின் 188 வது அவதார தினத்தையொட்டி நேற்று காலை சிறப்பு பணிவிடைகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் அங்குள்ள பெருமாள் கோயிலில் இருந்து சுவாமி எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது.

தொடர்ந்து பழைய பேட்டையின் முக்கிய வீதிகள், தென்காசி- பழைய பேட்டை சாலை வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தார். இதில் திரளாகப் பங்கேற்று தரிசித்த பக்தர்கள் வழிநெடுகிலும் அய்யா வைகுண்டரின் புகழ் பாடியவாறு சென்றனர்.

Tags : Ayya Vaikundar Avatar Day Celebration ,
× RELATED அய்யா வைகுண்டர் அவதார தின விழா: நெல்லை...