×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடையில் பார்வையாளர்கள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள்

கூடுவாஞ்சேரி, மார்ச் 3: வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்பட அரிய வகை விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இதனை கண்டு களிக்க சென்னை புறநகர், தென் மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோடை காலத்தை முன்னிட்டு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பூங்கா அதிகாரிகளிடம் கேட்டதற்கு, வண்டலூரில் உயிரியல் பூங்கா தினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும். கூடுதலாக மக்கள் வந்துவிட்டால் மாலை நேரங்களில் பாதுகாப்பு படையினருடன் இரவு 7 மணிவரை திறந்து வைக்கப்படும். இதில், 5 முதல் 12 வயதுவரை உள்ள சிறியவர்களுக்கு ₹35, பெரியவர்களுக்கு ₹75 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சைக்கிள் மற்றும் பேட்டரி கார்களில் சென்று சுற்றி பார்க்கும் வசதியும் உள்ளது.

இதில், கோடை காலத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் பறவைகளுக்கு துணி பந்தல் அமைக்கப்பட்டு உணவு வழங்கவும், கரடிகளுக்கு ஐஸ் வழங்கவும், யானைகளுக்கு 2 வேலை தண்ணீரால் ஆனந்த குளியல் அமைக்கவும், சிங்கம், புலி, சிறுத்தை ஆகியவற்றுக்கு தினமும் 2 வேளை தண்ணீர் பீய்ச்சி அடிக்கவும், மான்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைத்து, அதை தினமும் பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாரந்தோறும் செவ்வாய்கிழமையில் பூங்காவை பராமரிப்பதற்காக விடுமுறை அளிப்பது வழக்கம். இதில் தீபாவளி, பொங்கல் உள்பட பல்வேறு பண்டிகையின்போது செவ்வாய்க்கிழமைகளில் பூங்காவை திறந்து வைப்பது வழக்கம். ஆனால், தற்போது கோடை காலத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பூங்காவை திறந்து வைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இதில், பூங்கா சுற்று வட்டார பகுதி பார்வையாளர்கள் உட்பட தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு வசதியாக கோடை காலத்தை முன்னிட்டு இரவு நேரத்தில் பூங்கா திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டனர்.



Tags : Vandalur Zoo Special Events to Visitors ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...