×

உத்திரமேரூர் அருகே முறையாக சீரமைக்கப்படாத பெரியதெரு குளம்

உத்திரமேரூர், மார்ச் 3: உத்திரமேரூர் அருகே ஒரக்காட்டுபேட்டை கிராமத்தில் உள்ள பெரிய தெரு குளத்தை முறையாக சீரமைக்கவில்லை என அதிகாரிகள் மீது, பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவிக்கின்றனர்.உத்திரமேரூர் அடுத்த ஒரக்காட்டுப்பேட்டை கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராம கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்த்தலாக உள்ளது. கிராம மக்கள் மற்றும் கால்நடைகளின் வாழ்வாதாரத்திற்கு கிராமத்தில் ஆங்காங்கே நீர்நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கிய நீர்நிலையாக சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய தெரு குளம் உள்ளது. இந்த குளம் இக்கிராம மக்களின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இக்குளத்தை தூர் வாரி கரைகள் பலப்படுத்தி கால்வாய்களை சீரமைக்க, குடிமராமத்து பணி திட்டம் சார்பில் ₹1.4 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. ஆனால், அந்த பணியில் கால்வாய்களை முறையாக தூர்வாரவில்லை. கரைகளும் பலப்படுத்தவில்லை. குறிப்பாக, குடி மராமத்து பணி முறையாக நடக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் குளம் நீர் வரத்தின்றி வறட்சியடைந்து பாலைவனம் போல் காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு குளத்தை முறையாக தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி உரிய முறையில் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : pond ,
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...